சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
- அ.தாமஸ்
நம்மில் பலர் தகுதியான நமக்கு மறுக்கப்படும் பதவிகள் தகுதியற்ற சிலருக்கு ஒதுக்கப்படுகிறதே என்று கவலைப்படுகிறோம். நிச்சயமாக நாம் கவலைப்பட வேண்டிய விடயம் என்பதைக் கடந்து நாம் பெருமைப்பட வேண்டிய விடயம் இது. ஆம், அவர்கள் அப்பதவிக்குத் தகுதியானவர்கள்; நாமோ அப்பதவிக்குத் தகுதியானவர்களை உருவாக்கும் தகுதியானவர்கள். எனவே தான் நமக்கு மறுக்கப்பட்டது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அவர்கள் செல்வத்தை சம்பாதிக்கிறார்கள்; நாமோ, சேவையால் பிறரின் தேவை அறிந்து செயலாற்றி செல்வாக்கை சம்பாதிக்கிறோம். எனவே, மறுக்கப்பட்ட வாய்ப்புகளை நினைத்துக் கலக்கமுறாமல் கிடைத்திருக்கும் வாய்ப்பை நினைத்து மகிழ்ந்திருங்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு கூட பலருக்கும் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
தங்கம் இல்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லைதான். மதிப்போடு போற்றப்படுகிறது என்பதற்காக, தண்ணீரை விடத் தங்கம் உயர்வானது என்று கருதி விட முடியாதுதானே!
அப்படித்தான் நீங்களும், நீங்கள் தண்ணீருக்கு இணையானவர்கள்; யாரும் மதிக்கவில்லையே என்பதற்காக நீங்கள் கலங்க வேண்டாம். உங்களின் இடத்தை நிரப்பத் தகுதியானவர் நீங்கள் மட்டுமே! எனவே, ஒவ்வொரு நிலையிலும் மகிழ்ந்திருங்கள்; உங்கள் நிலையை நினைத்து நிறைந்திருங்கள்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)