சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

Su.tha Arivalagan
Sep 19, 2026,05:07 PM IST

- அ.தாமஸ்


வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும், எதிரியும் துரோகியும், விரோதியும் நண்பனும் நம் ஒவ்வொருவர் வாழ்வின் முக்கிய அங்கங்களே. இவற்றில் நமக்குக் கிடைத்த நல்ல அனுபவங்களைப் படைப்பாகவும், கசப்பான அனுபவங்களை படிப்பாகவும் ஏற்று முயற்சியைக் கைக்கொண்டு முன்னேறுவதில் முனைப்புக் காட்டுவோம். நினைப்பது நாம் நிறைவேற்றுவது இறைவனே. எனவே, அகமதில் மகிழ்வோம்; தினம் அதன் நினைவில். 


குனியாமல் நிமிரவோ விழாமல் எழவோ முடியாது. குனியாமல் நிமிர்ந்து நிற்பதை விட விழுந்தும் எழுந்து நிற்பதே மதிப்பிற்குரியது. எனவே, விழுவோம்; விழுந்த இடத்திலேயே மீண்டும் துளிர்வோம். 




நாள்களும் கூட ஆள்களைப் பொறுத்தே வேடம் தரிக்கிறது. சிலரோடு இணைந்து புகழ்ச்சிப்பா இசைக்கிறது. வேறு சிலரையோ புரட்டிப்போட்டு மிதிக்கிறது. இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் என ஏற்று புன்னகையோடு கடந்து போவோம். அப்புன்னகை கவலையிலும் கலங்காது கடந்து போகும் புதிய உலகை நமக்குக் காட்சிப்படுத்தும்.


விரும்பியவரோடு பயணிக்கையில் விரைவாய்க் கடக்கும் காலம் விரும்பாதவரோடு பயணிக்கையில் நடக்கவே தெரியாதது போல் கடக்கிறது. ஆம், கடத்தல் என்பது காலத்தின் கையில் இல்லை நம் எண்ணத்தின் நிலையில் இருக்கிறது.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)