இசைஞானி என்னும் இசைத்தோணி!
- எம்.கே.திருப்பதி
பண்ணைபுரத்து
புழுதி மண்களில்
புரண்ட அந்த
காலடித் தடங்கள் - இன்று
கானத் தடங்களாய்
காற்றில் அலைகிறது!
அன்னக்கிளியில்
அலர்ந்த இந்த
பாட்டுக்கிளி
பாரதம் தாண்டியும்
பாட்டால் அழைக்கிறது!
இவன்
வீணை நரம்புகளின்
வரம்புகள் அறிந்தவன்
இசை மொழிகளின்
இலக்கணம் செறிந்தவன்!
சுருதி லயம் தாளம்
என்னும்
சங்கீதக் கட்டுகளின்
சங்கதி தெரிந்தவன்!
பாட்டுச்சுவையின்
பாவம் கூட்ட ஒரு
சித்தன் போல
பித்தனாய் திரிந்தவன்!
சுரத்தின் சோபிதம்
சுரங்கள் ஓட்டும்! அவன்
கரத்தின் லாவகம்
கவலைகள் போக்கும்!
என்
இராப் பொழுதுகள்
இல்லை அந்த...
இசைஞானிகள்
இசை இல்லா
இராப் பொழுதுகள்!
என்
புலரிகளில் - அவன்
பண்ணிசை
புகாமல் இருந்ததில்லை...
அந்த
புண்ணியன் இசைப்
புனல் --
உணராமல் - என்
உயிரும் விடிந்ததில்லை!
வாழ்ந்தாலும்
அவன் கீதம்
வரவேற்பிலும்
அவன் கீதம்!
நோதலிலும்
அவன் இசையே - என்
காதலிலும்
அவன் இசையே!
மோதலிலும்
அவன் பாட்டே - குளிர்க்
கூதலிலும்
அவன் பாட்டே!
என்
நினைவுகளோடு
நீளக்கரம் கோர்த்து
நீண்டு கொண்டுவரும்
நித்தம் நித்தம்...
பாட்டுத் தலைவன் - அவனின்
பாட்டுச் சத்தம்!
ஈன்றதாய் என்னை
சுட்டு விரல் பிடித்து
சுற்றிய உலகில்
இன்றுநான் - அந்த
பாட்டுத் தலைவனின்
பா' பிடித்து சுற்றுகிறேன்!
பரவசப் பரப்பில்
பாதாதி கேசம்
பாரம் தொலைக்கிறேன்!
இன்றவன் அகவை
எண்பத்து மூன்று!
எண்ணிக்கை என்பது
வயதைக் குறிக்கலாம்
வாழ்க்கை என்பது
வாழும் வரை என்று
வார்த்தை விரிக்கலாம்!
ஏனெனில்
இசைக்கு மொழி இல்லை
என்பது வழக்கு!
இசைஞானிக்கும்
இவைப் பொருந்தும்
என்பது
என் கணக்கு!
வைய மிசையே!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)