கண்ணுக்குத் தெரியாத காற்று கையில் பிடிக்க முடியாத மேகம்!
- அ.வெங்கடேஷ்
கருநீலம் பரவும் வேளையில் வேற்றுமை மறைந்து
குளுமையான வெண் அமுத ஒளி பரவ
நித்திரையின்றி நினைப்பில் புரளும் சிலர்
நித்திரையால் மஞ்சத்தில் புரளும் சிலர்
சிலிர்க்கவைக்கும் குளுமையும்
நிகழும் அனைத்தின் சாட்சியாகும்
நிசப்தமாய் உலவும்
நிலவின் ஆதிக்கத்தின் கீழ் உறங்கும்
அனைவருக்கும் இனிய இரவு
கண்ணுக்குத் தெரியாத காற்று
கையில் பிடிக்க முடியாத மேகம் கொண்டு
பல கிறுக்கல்கள் ஓவியம் தீட்டும்
மேற்கே மறையும் ஆதவன்
அதற்கு வர்ணம் கூட்டும் வேளையில்
கூடு திரும்பும் இறகுகள் குலாவும்
தன் குழவிகளோடு பணம் தேடி ஓடும்
மனமும் ஒடுங்கும் மனையில் தழுவும்
தென்றல் மரங்களின் இடையே புகுந்து
கீதம் இசைக்கும் இன்னிசை பொழுது
இரவு வானில் உலவும் நிலவு
எங்கும் எங்கும் படரும் வெண்மை
காற்றில் ஏறும் குளுமை
என் மொட்டை மாடியில் பிரதிபலிக்க
அதில் நீந்துகிறேன்
தென்றல் தழுவ பால் போல் வெண்மை பரவ
இயற்கை அன்னையின் மடியில் கலை அன்னையின் துணையுடன்
கலைஞன் வடித்த நூலின் கதை காதில் ஏற
சொர்க்கத்தில் கிடக்கிறேன்
நான் சொக்கி கிடக்கிறேன்
இங்கு இல்லாமல்
கடந்த காலத்தில்
கதாபாத்திரங்களின் நடுவே சுற்றித் திரிகிறேன்
எங்கும் மௌனத்தைக் பரப்பும் இரவில்
இனிமைக்கும் கசப்பிற்கும் மவுன சாட்சியாய் விளங்கும்
நிலவின்கீழிருந்து தென்றலின் குளுமை
நித்ரா அன்னையின் அருள் பரிபூரணமாய் பரவும் வேளையில் இரவு!
திரண்ட மேகம்
அதில் இருந்து வருவதை பெற விரிந்த பூமி
ஆடாமல் நிற்கும் மரம்
ஆடும் கூந்தல் காதோரம் இசைக்கும்
காற்று கடக்கும் வெள்ளைக் கோடுகள் நீண்டு
நீல சாலை இணையும் தொடு வானத்தை நோக்கி நீளும் சாலையில்
மகிழ்ச்சியாக முரசு கொட்டும் முகில்களின் கீழே பயணம் மகிழுந்தில்
தாய் அன்பால் மகவின் குழல் கோதுவது போல
காற்று தான் ஊட்டி வளர்த்த மரத்தின் கிளைகளை கோதி விளையாட
அந்த அன்பால் சிலிர்த்து முகில்கள் பன்னீர் சிந்த
கரையும் காகத்தின் இறகுகள்
விளையாடும் காலைப்பொழுதில்!
(கவிஞர் அ வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இருள் என்பது குறைந்த ஒளியே என்ற நூலின் ஆசிரியர்)