மகளிர் சுதந்திர உலகப் பயணம்!
- கவிதா உடையப்பன்
அடர்ந்த காட்டினிலே
ஆரவாரம் அற்று இருக்க,
படர்ந்த கொடிகளில்
மலர்ந்த மலர்களின் நறுமணங்களை
நுகர்ந்து நின்றேன்;
தேர்ந்தெடுத்த வாழ்வின் தெம்மாங்கை திரும்பப் பிடித்தேன்.
பரந்த கடல் ஓரத்தில்
பாய்ந்து வந்த அலைகளை
மிகுந்த ஆர்வத்தோடு கண்டு
நிலைத்து நின்றேன்;
தொலைந்து போனது என் துயரங்கள்.
விரிந்து கிடந்த மணல்தனை
வாஞ்சையோடு வருடி, அதில்
மறைந்து கிடந்த சிப்பிகளை எடுத்து
மலைத்துப் பார்த்தேன்;
கலைந்து போனது என் நியாயக் கருத்துக்கள்.
தொடர்ந்து நின்ற மலைக் குன்றுகளில்
அநேக உயிர்கள்
நிறைந்து கிடக்க
படைத்துக் காப்பவனை நினைத்து
கரைந்து உருகி நின்றேன்;
விரைந்து சென்றன என்னை விட்டு வீண் வம்புகள்.
பரம ரகசியத்தை
பரிபூரணமாக உணர்ந்தேன் -
பரமன் கொடுத்த சுதந்திரத்தை பறிப்போர் யார் இங்கு?
படி ஏறினேன்.
பாக்கள் பாடினேன்.
அழகான இவ்வுலகினில்,
அனுதினமும் வாழ்ந்து,
ஆசைகளை வேய்ந்து,
ஆர்வத்துடன் தோய்ந்து,
அசல் தமிழ் மகள் என திகழ்ந்தேன்.
"உடுக்கை பிடித்தவன் கொடுத்த பாகம் நீ;
உமையவளின் மடியில் உதித்த ஜுவாலம் நீ
ஊக்கமே உறங்காதே!
உணர்வுகள் அதனை கலைக்க விடாதே,
ஊன்றுகோலே நீதானே!"
என்று எனக்கு நானே உரைத்தேன்.
மண்ணின் மாண்பு மாற்றியது என் பிழை.
விண்ணின் ஆரவாரம் வழங்கியது புது மழை.
சென்ற காலம் போதித்தது இதுதானே -
சிறுபிள்ளைத்தனத்தை நொறுக்கத்தானே!
சிட்டுக்குருவிகளைப் போல் நான் பறக்கத்தானே!
சிந்தனையே சுதந்திரம் என அறியத்தானே!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)