ஜனநாயகன் ரிலீசை தடுத்தது பாஜக.,வும், திமுக.,வும் தான்...ஆதவ் அர்ஜூனா பகிரங்க குற்றச்சாட்டு

Su.tha Arivalagan
Apr 10, 2026,12:24 PM IST

சென்னை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை முடக்க மத்திய அமைச்சரும், தமிழக அமைச்சரும் கைகோர்த்துச் செயல்படுவதாகத் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


என்ன நடந்தது?


தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த தவெக-வின் ஆதவ் அர்ஜுனா, 'ஜனநாயகன்' திரைப்பட விவகாரத்தில் ஆளும் திமுக மற்றும் மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதைத் தடுக்க மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டமிட்டுச் செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


திமுக - பாஜக ரகசியக் கூட்டணியா?




இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா முன்வைத்த மிக முக்கியமான குற்றச்சாட்டு, இது ஒரு கூட்டுச் சதி என்பதாகும். அவர் கூறியதாவது: "மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தான் ஜனநாயகன் படத்தை வெளியிட விடாமல் முடக்கினார். மேலும், இந்தப் படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக கசிய விட்டதற்குப் பின்னால் பாஜக மற்றும் திமுக-வின் கூட்டுச் சதி உள்ளது. திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எல்.முருகன் இந்தப் படத்தை முடக்கியுள்ளார்." தற்போதைய அரசியல் சூழலில் எதிரெதிர் துருவங்களாகத் தெரியும் திமுக-வும் பாஜக-வும், விஜய்யின் அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காக ரகசியமாக இணைந்து செயல்படுவதாக ஆதவ் அர்ஜுனா இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இணையத்தில் லீக் ஆன ‘ஜனநாயகன்’:


சென்சார் சான்று கிடைக்காததால் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்செயலாக நடந்தது அல்ல என்றும், படத்தின் வெற்றியைப் பாதிக்கும் நோக்கில் திட்டமிட்டுச் செய்யப்பட்ட வேலை என்றும் விஜய்யின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கொதித்து வருகின்றனர். 


இரண்டு நாட்களுக்கு முன் நெல்லையில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து பேசிய விஜய், ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் படத்தை வைத்து தன்னை மிரட்டி பார்த்தார்கள் என மறைமுகமாக பாஜக.,வை அவர் குற்றம்சாட்டி பேசினார். தற்போது இதே கருத்தை ஆதவ் அர்ஜூனாவும் பேசி உள்ளதும், அதுவும் எல்.முருகன் மற்றும் உதயநிதியின் பெயர்களை குறிப்பிட்டு வெளியப்படையாக அவர் குற்றம்சாட்டி உள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.