ஆடி மாதம் வந்தாச்சு.. அம்மன் அருளும் தந்தாச்சு.. ஆடி மாத சிறப்புகள்!
Jul 16, 2026,06:06 PM IST
- ஸ்வர்ணலட்சுமி
அம்மன் அருள் நிறைந்த ஆடி மாதத்தை பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.
ஆடி பிறந்ததம்மா... பராபவ வருடம் 20 26 ஜூலை 17ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஆடி மாதம் முதல் தேதி பிறக்கிறது. அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில் ஆடி மாதம் பிறந்துள்ளது மிகவும் விசேஷமாகும். ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாடுகளும் மற்றும் அனைவரும் நினைவில் வருவது ஆடித்தள்ளுபடி தானே ஃபிரண்ட்ஸ்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனிச்சிறப்பு என்பது உண்டு. அதற்கு காரணம் யாதெனில் ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உரிய மாதமாகவும், அம்மன் ஆலயங்களில் ஊற்றப்படும் கூழும் அனைத்து இடங்களில் இருக்கும் அம்மன் கோவில்களில் ஒலிக்கும் அம்மன் பாடல்கள் தானே..
சக்தி மாதம்:
ஆடி மாதத்தை" சக்தி மாதம் "என்றும் "அம்மன் மாதம் "என்றும் அழைப்பதுண்டு. ஆடி செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
உத்திராயணம்- தட்சிணாயண காலம்:
இந்து சமயத்தில் சூரியனின் நகர்வை வைத்து தான் வருடத்தை "உத்தராயணம் 'என்றும் 'தட்சிணாயணம்' என்றும் இரு பிரிவுகளாக பிரித்தனர். சூரியன் தெற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் காலம் அதாவது தைமாதம் முதல் ஆனி மாதம் வரை உத்திராயண காலமாகவும்,இந்த காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகவும் இருக்கிறது.
சூரியன் வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயன காலம் ஆகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன காலமாகவும்,இந்த ஆறு மாதமும் தேவர்களுக்கு இரவு பொழுதாகவும் இருக்கிறது.ஆடி மாதத்தில் சூரியனின் ஆற்றல் அதிகமாக வெளிப்படும் என்கிறார்கள்.அதனால் தான் ஆடி மாதம் மந்திரங்கள்,வேத பாராயணங்கள், ஜெபங்கள் ஆகியவற்றிற்கு அதிக சக்திகள் உள்ளன.
சிறப்புகள்:
தெய்வீக மனம் கமலும் இந்த ஆடி மாதத்தில் மற்ற மாதங்களை விட அதிகமாக சிறப்பான விசேஷ நாட்கள் உள்ளது. அந்த நாட்களில் சரியான முறையில் அம்மனை வழிபட பூரண நலமும் வளமும் பெற்று வாழலாம் , வாழ்வில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதம் முதல் நாளே அம்மனுக்கு உரிய வெள்ளிக்கிழமைகளில் பிறந்திருப்பது கூடுதல் சிறப்புடையதாகும். ஆடி வெள்ளி தொடங்கி ஆடி 18,ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி பௌர்ணமி என பல சிறப்புகளைக் கொண்டுள்ளது இம்மாதம். அத்துடன் கிராமங்களிலும் அம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன்,மாடசாமி, கருப்பண்ணசாமி உள்ளிட்ட அனைத்து காவல் தெய்வங்களுக்கும் இந்த மாதத்தில் தான் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.
ஆடி மாத விசேஷ மற்றும் விரத நாட்கள்:
ஆடி 1 : ஆடி முதல் வெள்ளிக்கிழமை.
ஆடி 3 :ஞாயிறு சஷ்டி விரதம்.
ஆடி 13: புதன் ஆடிப் பௌர்ணமி.
ஆடி 18:திங்கள் ஆடிப்பெருக்கு.
ஆடி 21 :வியாழன் ஆடிக்கிருத்திகை.
ஆடி 27 :புதன் ஆடி அமாவாசை.
ஆடி 29 :வெள்ளி ஆடிப்பூரம்.
இத்தனை சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு. கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டை சுத்தம் செய்து,பூஜை அறையில் அமைந்திருக்கும் அம்மன் படங்களுக்கு மலர்களால் அலங்கரித்து, விளக்கேற்றி, அன்னைக்கு பொங்கல், பாயாசம் என அவரவர்களால் இயன்ற நைவேத்தியத்தை படைத்து அம்மன் பாடல்கள் பாடி வழிபாடு செய்வதனால் அம்மன் அருள் கிடைக்க பெறலாம்.
ஆடி மாதத்தில் அம்பிகையிடம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால் மனதார அன்னையை வழிபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோமாக.
மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.