மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

Swarnalakshmi
Jul 23, 2026,12:37 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 2026 மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி முளைக் கொட்டு   திருவிழா ஜூலை 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


"ஆடிப்பட்டம் தேடி விதை" எனும் ஆன்றோர் வாக்கின்படி விவசாயிகள் ஆடி மாதம் விதை விதைத்து, நாற்று நட்டு,விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர்கள் அமோகமான விளைச்சல் தரவேண்டிய முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வது வழக்கம். 


இந்த வகையில் மீனாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு மட்டும் உரிய திருவிழாக்கள் ஆடி மாதம் வரும் முளைக்கொட்டு திருவிழா ஐப்பசி மாதம் கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி  எண்ணெய் க்காப்பு ஆகியவை சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள் ஆகும்.


சிறப்புகள்:




சிறப்பு பெற்ற ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம் ஜூலை மாதம் 16ஆம் தேதி அம்மன் சன்னதி முன்பு நடைபெற்றது. இதனை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட அம்மன் சன்னதியில் முன் உள்ள கொடிமரம் முன்பு மீனாட்சி அம்மன்  பல்லக்கில்  எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடியேற்ற விழாவில் பங்கேற்பதற்காக மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் பெற்றனர்.இந்த விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் விழாவாகும். 


காலையிலும், மாலையிலும் மீனாட்சி அம்மன் தினமும் பஞ்சமூர்த்தி களுடன் கோயில் வளாகத்தில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அப்போது சிறப்பு நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் வரவேற்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து கொட்டுமேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டி அம்மன் இருப்பிடம் சேர்ந்தடைவார். விழாவில் ஜூலை மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை மாலை அம்மன் ஆடி வீதி உலா நிறைவடைந்தது. உற்சவர் சன்னதியில் மாலை மாற்றும் பூஜைகள் கோலாகலமாக நடைபெற்றது.


நோக்கம்:


மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் ஆடி முளைக் கொட்டு திருவிழாவின் நோக்கம் யாதெனில் விவசாயம் செழிக்கவும், மழை வளம் பெருகவும் இந்த திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


திருவிழா நிகழ்ச்சிகள் கடைசி மூன்று நாட்கள்:


23.07.2026 வியாழன் எட்டாம் நாள் திருவிழா காலை 9 :00மணி அளவில் தங்கச்சப்பரத்தில் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.இன்று இரவு 7 :00மணிக்கு அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.


24.07.2026 வெள்ளிக்கிழமை ஒன்பதாம் நாள் சட்டத்தேர் நடைபெறும். காலை 10:05 மணி முதல் 10 :29 மணி வரை சட்டத்தேர் வீதி உலா நடைபெறும். இரவு 7:00 மணிக்கு அம்பாள் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி அளிப்பார்.வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரவு 8: 00 மணிக்கு மேல் புஷ்ப விமானத்தில் அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.


25.07.2026 சனிக்கிழமை பத்தாம் நாள் நிறைவு விழா காலை திருவிழாவின் நிறைவாக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு அம்பாள் கனக தண்டியல்  வாகனத்தில் உலகமே போற்றும் சயன திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் கோலாகலமான நிகழ்வாகும்.


ஆடி மாதம் நடைபெறும் மதுரை மீனாட்சியம்மன் ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பவர்கள் இந்த கடைசி மூன்று நாட்களை தவற விடாதீர்கள்.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.