ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

Swarnalakshmi
Jul 24, 2026,12:02 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 2026 ஜூலை மாதம் 17 ஆம் தேதி ஆடி மாதம் முதல் நாள் அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் பிறந்தது மிகவும் விசேஷமாகும். இன்று ஜூலை 24ம் நாள் இரண்டாம் ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு செய்வது அதீத சிறப்பு.


ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் பக்தர்கள் வழிபாடுகள் செய்வது வழக்கம். பல இடங்களில் மாரியம்மனுக்கு திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


"சக்தி இல்லையேல் சிவன் இல்லை,சிவன் இல்லையேல் சக்தி இல்லை " ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.இதில் தட்சிணாயனத்திற்கு உரிய சிறப்பும் சேர்வதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்பு உடைய நாட்களாக கருதப்படுகின்றது.


ஆடி வெள்ளி வழிபாடுகளும் பலன்களும் :




ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது சிறப்பு.


சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, மகாலட்சுமி தாயை வழிபட   வீட்டில் செல்வம் பெருகும், மாங்கல்ய பலம் கூடும். செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும். மன அமைதி குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.


பெண்கள் துளசி பூஜை செய்து வர நினைத்தது நிறைவேறும்.வீட்டில் சகல செல்வங்களும் நிறைந்திருக்கும்.நீண்ட ஆயுள் கிடைக்கும்.


ஆடி மாதம் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில்  சிறப்பு பூஜைகள் செய்து, 10 வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, வெற்றிலை,பாக்கு, பழம் மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், கொடுப்பது லட்சுமி கடாட்சம் நிலைக்க வழிவகுக்கும்.


ஆடி மாதம் அம்மனுக்கு வளையல் சாற்றி,அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், நீங்காத நிறை செல்வம் மற்றும் சகல நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.


ஆடி மாதம் அம்மனுக்கு வாங்கி சாத்தும் வளையல்கள்  - அதன் பலன்கள் :


சிவப்பு வளையல்: 


ஆரோக்கியம், சக்தி, துணிவு மற்றும் வெற்றி.


மஞ்சள் வளையல்:


மங்களம், திருமண யோகம்,மகிழ்ச்சி பெருகும் .


பச்சை வளையல்: 


செல்வ வளம், குடும்ப ஒற்றுமை, அமைதி நிலைத்திருக்கும். மன நிம்மதி பெருகும்.


நீலம் வளையல்: 


கண் திருஷ்டி நீங்கும். தடைகள் நீங்கி, நினைத்த காரியம் நிறைவேறும்.


ஆரஞ்சு வளையல்: 


ஆற்றல்,உற்சாகம், தொழில் முன்னேற்றம், பணவரவு அதிகரிக்கும்.


பிங்க் வளையல்:


அன்பு நிலைத்திருக்கும், இரக்கம், பாசம் உருவாகும்.உறவுகள் மேம்படும்.


ஊதா வளையல்:


கல்வியில் வெற்றி, ஞானம், புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.


ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை முறையாக,பக்தி சிரத்தையுடன் செய்வதனால் நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல இன்னல்கள் தீரும் என்பது ஐதீகம்.


ஆனந்த வாழ்வு தரும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடுகள் செய்து அம்மன் அருள் பெற்று மேலோங்கி வாழ்வோமாக.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலக்ஷ்மி பாலசுப்ரமணி.