ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?
- சுமதி சிவக்குமார்
சென்னை: ஆண் பாவம் பொல்லாதது படக் குழு செம ஹேப்பியாக உள்ளதாம். இதற்கு முக்கியக் காரணம், இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் இப்படத்துக்குத்தான் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுதான். கூடவே வசூலிலும் கூட இது அசத்தியுள்ளதாம்.
ரியோ ராஜ் நாயகனாக நடித்த படம்தான் ஆண் பாவம் பொல்லாதது. கலையரசன் தங்கவேல் இயக்கியிருந்தார். சீரியலில் அறிமுகமாகி பின்னர் பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலமாகி தற்போது ஹீரோவாக அசத்தி வருகிறார் ரியோ ராஜ். கதைகளைத் தேர்வு செய்து அழகாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இவரது படங்கள் ஒவ்வொன்றும் பேசப்படுகின்றன.
மாளவிகா மனோஜ் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் நாயகியாக நடித்திருந்தார். மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா உள்ளிட்டோரும் முக்கியப் பாத்திரங்களில் அசத்தியிருந்தனர். மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலிலும் அசத்தியது. கிட்டத்தட்ட ரூ. 22 கோடி அளவுக்கு வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு அதிக லாபத்தைக் கொடுத்த படமாகவும் அது மாறியுள்ளது.
அதாவது மிகவும் சிறிய பட்ஜெட்டில் உருவான படம் இது. அப்படிப்பட்ட படம் மக்களின் பேராதரவால் மிகப் பெரிய வசூலைப் படைத்து பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது. நல்ல கதையுடன் படம் கொடுத்தால் மக்கள் கை தூக்கி விட்டு ஆதரிப்பார்கள் என்பதை இந்தப் படமும் நிரூபித்துள்ளது. ஆரம்பத்தில் இப்படத்துக்குப் பெரிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சிறிய தியேட்டர்கள்தான் கிடைத்தன, காட்சிகளும் கூட அதிகமாக கிடைக்கவில்லை. ஆனால் மக்கள் கூட்டம் கொடுத்த ஆதரவைத் தொடர்ந்து காட்சிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பில் பங்கேற்று எழுதி வருகிறார்)