அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

Su.tha Arivalagan
Jan 30, 2026,01:23 PM IST

சென்னை: இந்தியா டுடே - சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் பல செய்திகளை மக்களிடையே பரப்பி வருகின்றன.


நாளையே நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடந்தால் யார் வெல்வார்கள் என்பதே இந்தக் கருத்துக் கணிப்பின் சாராம்ச கேள்வி. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு 2வது இடமே கிடைக்கும் என்றும் அது கூறுகிறது. 


அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கடந்த முறையை விட இந்த முறை அதிக இடங்கள் கிடைக்கும் என்றும், இந்தியா கூட்டணிக்கு இடங்கள் குறைவதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கதாக உள்ளது.




அதை விடுவோம்.. தமிழ்நாட்டுக்கு வருவோம். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் நாளையே தேர்தல் நடந்தால் யார் வெல்வார் என்ற கேள்விக்கு வழக்கம் போல திமுக கூட்டணியே வெல்லும் என்ற முடிவு வந்துள்ளதாக கருத்துக் கணிப்பு சொல்கிறது.


அதாவது மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 38 இடங்கள் கிடைக்குமாம். அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு  1 இடம் கிடைக்குமாம். மற்ற கட்சிகள் வெல்ல வாய்ப்பில்லை என்று கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த 2024 தேர்தல் முடிவுடன் ஒப்பிடும்போது, திமுக கூட்டணிக்கு ஒரு இடம் குறைவு, அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் லாபம் என்பது குறிப்பிடத்தக்கது.


யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்று பார்த்தால், அதில் பெரிய வித்தியாசம் தெரிகிறது. அதாவது கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது திமுக கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 41 சதவீத வாக்குகளும் கிடைத்தன. மற்றவர்களுக்கு 12 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதில் நாம் தமிழர் கட்சியும் அடக்கம்.


இப்போது வந்துள்ள வாக்கு சதவீதத்தைப் பார்த்தால் வித்தியாசம் நிறையவே இருக்கிறது.  தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 33 சதவீத வாக்குகளே கிடைக்குமாம்.  திமுக கூட்டணிக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்குமாம். மற்றவர்களுக்கு 22 சதவீத வாக்குகள் கிடைக்குமாம். மற்றவர்களில் தவெகவும் அடக்கம். அந்தக் கட்சிக்கு மட்டும் 15 சதவீத வாக்ககுள் கிடைக்குமாம். தவெக 15 சதவீத வாக்குகளைப் பிரிப்பது இதன் மூலம் புலனாகிறது.


விஜய் நிச்சயம் இந்தத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துகிறார். சரி பாதிப்பு யாருக்கு என்று பார்த்தால் அதிமுக பாஜக கூட்டணிக்குத்தான் விஜயால் அதிக அளவிலான பாதிப்பு ஏற்படுவது தெரிகிறது. கடந்த முறை 41 சதவீத வாக்குகளைப் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த முறை பெரும் சரிவு காணப்படுகிறது. அதேசமயம், திமுக கூட்டணிக்கு 2 சதவீத அளவுக்குதான் சரிவு காணப்படுகிறது. ஆனாலும் 38 தொகுதிகளை அது வெல்கிறது. 




இதெல்லாம் மக்களவைத் தேர்தலுக்கான கணிப்புதான். மக்கள் மன ஓட்டம், சட்டசபைத் தேர்தலுக்கு வேறு மாதிரிதான் இருக்கும். சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தரப்பு இன்னும் பெரிய அளவில் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. வெளியில் வந்து விஜய் பெரிய அளவில் அதிரடி காட்டவில்லை. மக்களை இன்னும் நெருக்கமாக சந்திக்கவில்லை. கிராமங்களுக்குப் போகவில்லை. இதெல்லாம் நடந்தால், மேலும் வேகம் காட்டினால் அவரது கட்சியின் வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. அப்படி நேரும்போது  திமுகவின் வாக்குகளையும் கூட அவர் இன்னும் அதிகமாக பறிக்க வாய்ப்புள்ளது.


இதெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. நடக்க பாஜக விடுமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். எப்படியோ வருகிற சட்டசபைத் தேர்தலில் செம கலாட்டா காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாகிறது.