ஆபரேஷன் நும்கூர்: துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

Meenakshi
Sep 23, 2025,02:19 PM IST

கொச்சி:  கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல், கேரளாவை சேர்ந்த நடிகர் பிரித்விராஜ். இவரும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு நடிகர்களுக்கும் கேரளாவில் உள்ள கொச்சியில் சொகுசு வீடுகள் உள்ளன. இந்த இருவரின் வீடுகள் உட்பட மொத்தம் 30 இடங்களில் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த சோதனையின் பின்னணியில், பூட்டானில் உயர்ரக வாகனங்களை ஏலத்தில் குறைந்த விலையில் வாங்கி, அதனை இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்துள்ளனர். நடிகர்களை குறிவைத்து இந்த விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், மத்திய அரசுக்கு பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்தநிலையில் தான் மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின்வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.