திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; ஆனால்...: நடிகர் லாரன்ஸ் சொன்னது என்ன?
சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே 'திருச்சி கிழக்கு' தொகுதி இடைத்தேர்தல் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, பிரபல நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இந்த இடைத்தேர்தலில் களம் காணப்போவதாக சமூக ஊடகங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பலத்த வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
"திருச்சி கிழக்கில் போட்டி இல்லை"
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை" என்பதை மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் அறிவித்துள்ளார். பரப்பப்பட்ட வதந்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து அவர் விரிவாகப் பேசுகையில், "நான் திருச்சி கிழக்கு தொகுதியில் நிற்பது தர்மமே இல்லை. அதற்காக நான் அரசியலுக்கு வரப்போவதே இல்லை என்று இதற்கு அர்த்தம் கிடையாது. தயவுசெய்து யாரும் அவசரப்பட வேண்டாம்" என்று தனது அரசியல் வருகை குறித்த யூகங்களுக்குப் பதிலளித்துள்ளார்.
"வேறு எங்கும் நிற்கமாட்டேன் என கூறவில்லை"
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்தாலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்த ஒரு முக்கிய குறிப்பையும் அவர் இந்த விளக்கத்தில் பதிவு செய்துள்ளார். "நான் வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்று கூறவில்லை" எனத் தெரிவித்துள்ள அவர், தகுந்த நேரத்தில் முறையான முடிவை அறிவிப்பேன் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கட்சியில் சேர்ந்ததும் எனக்கு சீட் கிடைத்து விட்டால் பிறகு அந்த கட்சியில் உழைத்தவர்களின் நிலை என்ன ஆகும்? வாங்க திருச்சி கிழக்கு எம்எல்ஏ., என்றே என்னை சிலர் அழைக்கிறார்கள். விஜய்யை யாரை நிறுத்துகிறாரோ அவரே திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் அரசியலுக்கு வரப் போவதாக லாரன்ஸ் அறிவித்திருந்தார். பிறகு தான் அரசியலுக்கு வரவா, வேண்டாமா என மக்களிடம் கருத்து கேட்டிருந்தார். மக்கள் வேண்டாம் என்றால் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் கூறி இருந்தார். இவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததால் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இது குறித்த யூகங்களுக்கு முடிவு கட்டும் வகையில் லாரன்ஸ் இன்று வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.