பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு

Meenakshi
Jul 16, 2025,02:14 PM IST

சென்னை: படத்தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.


சென்னை ஐகோர்ட்டில், பாபிடச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், "எங்களது நிறுவனத்தின் சார்பில் நடிகர் ரவி மோகனை வைத்து 2 படங்கள் தயாரிக்க திட்டமிட்டு, அவருடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்தோம். முதல் படத்துக்கு ரூ.15 கோடி ஊதியமாக பேசப்பட்டு, ரூ.6 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஒப்பந்தத்தை மீறி மற்ற நிறுவனங்கள் படங்களில் அவர் நடித்ததால், கொடுத்த முன்பணத்தை ரவி மோகனிடம் திருப்பிக் கேட்டோம்.




அதற்கு அவர் முன்பணத்தை திருப்பி கொடுப்பதாகவும், ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாகவும் கூறினார். ஆனால் இதுவரையில் முன்பணம் ரூ.6 கோடியை திருப்பித்தரவில்லை.தற்போது ரவி மோகன் தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் மூலமாக புதிதாக 'ப்ரோ கோட்' என்ற படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே, எங்களிடம் வாங்கிய முன்பணம் ரூ.6 கோடியை வட்டியுடன் திருப்பித்தர ரவி மோகனுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் நடிகர் ரவி மோகன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார். 


இந்தநிலையில், படத்தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவில், கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் 2 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்திருந்தேன். ஆனால், இதுவரை படப்பிடிப்பைத் தொடங்கவில்லை. இதன் காரணமாக தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனது. எனவே அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளருக்கு தகவல் தெரிவித்தேன். முன் பணமாக கொடுத்த ரூ.6 கோடியை திருப்பித் தரும்படி தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.


தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , முன்பணத்தை திருப்பி கொடுக்க நடிகர் ரவி மோகன் தயாராக உள்ளார். அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த பின் அத்தொகையை கொடுப்பதாக கூறினார். இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் 2 பேர் தாக்கல் மனுவையும் விசாரணைக்கு பட்டியலிடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.