படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்... மருத்துவனையில் அனுமதி!
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் படப்பிடிப்பில் இருந்த போது மயக்கமடைந்த நிலையில் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ரோபோ சங்கர், தமிழில் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமானார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். விஜய் டிவி நிகழ்ச்சிக்கு முன்னர் தர்ம சக்கரம், படையப்பா உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்தவர் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி காமொடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.
தற்போது, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தில் நடித்திருந்தார். மற்றொரு படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்து வருதாக அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான டாப் குக்கூ டூப் குக்கூ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது நேர்த்தியான பங்கேற்பு மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார் எனலாம்.
இந்நிலையில், சென்னையில் இன்று படப்பிடிப்பில் இருந்த போது, அவர் திடீர்ரென மயக்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.