தாடி பாலாஜி.. Nooo.. இனி பொதுச் செயலாளர் பாலாஜி.. புதுச்சேரியில் அடித்த லக்கி பிரைஸ்!

Su.tha Arivalagan
Jan 27, 2026,09:54 AM IST

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து செயல்பட்டு பின்னர் அதிலிருந்து விலகி, புதுச்சேரி அரசியலில் புகுந்துள்ள நடிகர் தாடி பாலாஜி, தற்போது லட்சிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பெரிய போஸ்ட்டில் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டு அரசியலுக்கும், சினிமாவுக்கும் அப்படி ஒரு பொருத்தம் உள்ளது. நடிகராக பிரபலமாகி விட்டால் போதும், அடுத்து அரசியல்தான். எம்ஜிஆர் காலம் தொட்டு, இப்போது வரை அதுதான் தொடர்கிறது. மக்களும் அதை சகிக்கப் பழகிக் கொண்டு விட்டனர். சினிமாவில்தான் தங்களது தலைவர்களையும் அவர்கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள். 




அந்த வகையில், பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தற்போது தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளார். சமீபத்தில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய அரசியல் கட்சியில் இணைந்த நடிகர் தாடி பாலாஜிக்கு, அக்கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின், தனது கட்சியின் பொதுச் செயலாளராக பாலாஜியை நியமித்துள்ளார்.


பாலாஜி ஏற்கனவே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். தற்போது அங்கிருந்து விலகி, லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து அதன் இரண்டாம் கட்டத் தலைவராக உருவெடுத்துள்ளார்.


தன்னை பொதுச் செயலாளராக நியமித்த கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ள பாலாஜி, கட்சியின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் அயராது பாடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.


திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பாலாஜி, இப்போது அரசியல் களத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.