திருமண நாளிலேயே குழந்தை பிறந்தது.. அப்பாவானார் விஷ்ணு விஷால்.. இரட்டிப்பு மகிழ்ச்சி!
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதியின் நான்காவது திருமண நாள் இரட்டிப்பு விசேஷமாகியுள்ளது. ஆம், ஜுவாலா கட்டாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
தமிழ் சினிமாவில் உயர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் முதல் முதலாக வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அதிலும் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகிய இந்த கதைக்களம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அது மட்டுமல்லாமல் நடிகர் சூரியின் முதல் படமான இப்படத்தின் கதாபாத்திரம் மூலம் புரோட்டா சூரி என்ற பெயரையும் பெற்று புகழ்பெற்றார்.
இதனைத் தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம், பலே பாண்டியா, இன்று நேற்று நாளை, துரோகி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த முண்டாசுப்பட்டி, நீர்ப் பறவை, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அதிலும் சீனு ராமசாமி இயக்கத்தில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்த நீர்ப்பறவை திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் விஷ்ணு விஷாலுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதேபோல் பெண்களை மையமாகக் கொண்டு உளவியல் ரீதியான திரில்லர் திரைப்படமான ராட்சசன் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இறுதியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதற்கிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
விஷ்ணு விஷால், ஜ்வாலா கட்டா தம்பதிகளின் நான்காவது திருமண நாளில் இருவரும் பெற்றோர்களாகியுள்ளனர். ஜுவாலா கட்டாவு்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடிகர் விஷ்ணு விஷால், மனைவி ஜ்வாலா கட்டா தம்பதியின் கைகளுக்கு நடுவில் பிறந்த பெண் குழந்தையின் கை இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்.
இன்று எங்களுக்கு நான்காம் ஆண்டு திருமண நாள். அதே நாளில் மகள் பிறந்திருப்பது மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் தேவை என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.