ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!
சென்னை: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ள இந்திய ராணுவத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவம் மே 7 அதிகாலையில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து "Operation Sindoor" என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியது. இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது 25 நிமிடத்தில் மின்னல் வேகத் தாக்குதல் நடத்தியது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இது அமைந்தது. பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய ராணுவத்திற்கு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக திரைப்பிரபலங்களும் இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், இதுதான் இந்திய ராணுவத்தின் முகம். ஜெய் ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் துப்பாக்கி படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருப்பார். அதில் அவர் தனது ராணுவ சகாக்களோடு தீவிரவாதிகளை தேடித் தேடி என்கவுண்டர் செய்யும் காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மக்கள் மனங்களை அள்ளி எடுத்து நடித்திருந்தார். மக்கள் மத்தியில் உணர்ச்சி பெருக்கை வெகுண்டெழச் செய்தது அமரன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.