எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?
சென்னை : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், குறிப்பாக அதிமுக-பாஜக கூட்டணியில் இருக்கும் தலைவர் சென்று முதல்வரை சந்தித்து வருவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஓபிஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது பேசு பொருளாகியுள்ளது.
கடந்த வாரங்களாகவே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. ஒரு பக்கம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்ட வருகிறார்கள். பிரதமர் மோடி வேறு அடுத்தடுத்து தமிழகம் வருகிறார். மற்றொரு புறம் விஜய், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகளுடன் சந்திப்பு என தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையில் தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தமிழகமே பரபரப்பானது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலினை பல்வேறு தலைவர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வரை வீடு தேடிச் சென்று சந்தித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என பலரும் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். இருந்தாலும் இது வழக்கமான அரசியல் நிகழ்வாக தான் பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று ஒரே நாளில் இரண்டு முறை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்று சந்தித்தது தான் உச்சகட்ட பரபரப்பை கிளப்பி உள்ளது. அதுவும் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த சிறிது நேரத்தில் சென்று பார்த்து, பேசி விட்டு வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் சென்று முதல்வரை சந்தித்து விட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் முதல்வரை நலம் விசாரிக்க சென்றதாக சொல்லப்பட்டாலும், இவர்கள் அளித்த பேட்டியை நன்கு கவனித்து பார்த்தால் திமுக கூட்டணிக்கு செல்ல தயாராகி விட்டதையே காட்டுகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் பிடிாவதம் காரணமாகவே இன்று ஓபிஎஸ்ஸை இழக்கும் நிலைக்கு பாஜக போய் விட்டது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு வட்டம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட அவர் அரசியலில் சீனியர். தென் மாவட்டங்களில் ஓரளவுக்கு அவருக்கும் பலம் இருக்கிறது. சமுதாய வாக்குகளைக் கவர முடியும். இப்படி சில பிளஸ் பாயிண்ட்டுகள் இருப்பதால்தான் அவரையும் அணியில் இணைக்க பாஜக முயற்சித்து வந்தது. ஆனால் அதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ்ஸை விட அதிமுக பலமே இப்போதைக்கு அவசியம் என்பதால் ஓபிஎஸ்ஸை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது பாஜக.
ஒருவேளை ஓபிஎஸ் உண்மையாகவே, நலம் விசாரிக்க தான் முதல்வரை சென்று சந்தித்தார் என்றால் எதற்காக பாஜக அவசர அவசரமாக ஓபிஎஸ்.,ஐ சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்? ஏற்கனவே பாஜக மீது அதிருப்தியில் இருப்பதால் அவர் திமுக கூட்டணியில் இணைவாரா அல்லது தவெக பக்கம் சாய்வாரா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் முதல்வரை சந்தித்துள்ளதால் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதிமுக-பாஜக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ஒவ்வொருவராக சென்று முதல்வரை சந்தித்து வருவதால், அவர்கள் திமுக கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்பை அதிகரித்து வருகிறது. அப்படி ஓபிஎஸ், தேமுதிக ஆகியோர் திமுக கூட்டணிக்கு சென்றால் திமுக.,வின் பலம் அதிகரிக்கும். ஓபிஎஸ்ஸை வைத்து தென் மாவட்டங்களில் திமுக தனது ஆதரவு பலத்தை சற்று அதிகரிக்க வாய்ப்புண்டு.
இந்த பக்கம் அதிமுக-பாஜக கூட்டணியில் பார்த்தால் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர் கட்சி என மிக சிலர் மட்டுமே உள்ளார்கள். அவர்களுக்கும் ஓட்டு வங்கி என்று பார்த்தால் மிக மிக சொற்பமாக தான் உள்ளது. பாஜக சின்னத்திலோ அல்லது அதிமுக சின்னத்திலோதான் இவர்கள் போட்டியிடும் நிலையிலும் உள்ளனர். இதனால் அதிமுக-பாஜக கூட்டணி மேலும் பலவீனமாகவே காட்சி தருகிறது.
இன்னொரு பக்கம், பாஜகவுடன் சேர்ந்ததால் பெரிய லாபம் இருக்கப் போவதில்லை என்று உணர்ந்து அதிமுகவும், சத்தம் போடாமல், விஜய்யை கூட்டணியில் சேர்க்க தீவிரம் காட்டி வருகிறது. விஜய்யும் சரி, அதிமுக.,வும் சரி ஒருவரை ஒருவர் எதிர்ப்பதோ, கடுமையாக விமர்சிப்பதோ கிடையாது. அதே சமயம், பாஜக உடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என விஜய் உறுதியாக கூறி வருகிறார். இப்படி முரண்பட்ட சூழலால் பாஜக-அதிமுக கூட்டணி குழப்பத்திலேயே உள்ளது.
விஜய்யின் தவெக, பாமக இந்த இரு கட்சிகளும் யாருடன் கூட்டணி என அறிவிப்பதை பொறுத்தே பாஜக-அதிமுக கூட்டணி தொடருமா? அப்படியே தொடர்ந்தாலும் அந்த கூட்டணிக்கு பலம் எப்படி இருக்கும் என்பது முடிவாகும்.