அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!

Meenakshi
Feb 06, 2026,05:24 PM IST

சென்னை: அதிமுகவினர் வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசத் தெரிந்தவர்கள், ஆனால் சொன்னதைச் செய்து காட்டுவது திமுக தான் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காரசாரமாகப் பதிலளித்துள்ளார்.


முன்னதாக, சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "வரும் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 2.0 கிடைக்காது, வெறும் பூஜ்ஜியம் (Zero) தான் கிடைக்கும்" என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது அவர் பேசுகையில், திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான குழுவை அமைத்துள்ளது. அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அனைவரும் கொண்டாடும் விதமாக நம்முடைய தேர்தல் அறிக்கை இருக்கும். அந்த குழுவின் தலைவர், நமது கழகத்தின் துணைப்பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளதை போல முக்கியமான தேர்தல் அறிக்கையாக அது இருக்கும். 




அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும். திமுக தான் அதனை செய்யும். மகளிர் உரிமை தொகையை கொடுக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் என்று விமர்சித்து இருந்தார். அதனையும் நாங்கள் செய்து காட்டினோம். அறிவிக்கப்பட்ட திட்டத்தை விட, கூடுதலாகவே நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்.


பட்ஜெட் குறித்தான அறிவிப்புக்கு பொறுத்து இருங்கள். தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் பட்ஜெட்டில் இடம்பெறும்.  நாங்கள் என்ன அறிவித்து இருந்தோமோ அதனை ஜெராக்ஸ் காப்பி எடுத்து அறிவித்து இருக்கிறார்கள். திமுகவின் நடைமுறையில் இருக்கும் திட்டங்களை அப்படியே காப்பி அடித்து விட்டீர்கள் என்று கட்சி சாராதவர்கள் கூட விமர்சித்து இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.