தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
சென்னை : தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து நான்கு மாதங்களிலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழக அரசின் போக்கையும், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தையும் கடுமையாகச் சாடினார்.
தவெக ஆட்சியில் தொடரும் போராட்டங்கள் :
தவெக ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களிலேயே மக்கள் பெருமளவில் அதிருப்தி அடைந்துள்ளனர். விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் தெருவில் இறங்கிப் போராடும் நிலை உருவாகியுள்ளது. "நான்கே மாதங்களில் தவெக ஆட்சியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன" என்று சாடிய அவர், மக்கள் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
லண்டன் பயணம்: முதலீடா? இன்பச் சுற்றுலாவா?
முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தைக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, "தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், முதலீடுகளை ஈர்க்கும் அதிகாரப்பூர்வ பயணங்களில் துறையின் அமைச்சர் மற்றும் முதன்மை அதிகாரிகளே உடன் செல்ல வேண்டும். அதை விடுத்து, சம்பந்தமில்லாத நபர்களையும் அதிகாரிகளையும் அழைத்துச் சென்றுவிட்டு, தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இது முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமா அல்லது இன்பச் சுற்றுலாவா?" எனக் கேள்வி எழுப்பினார்.
மின் பற்றாக்குறை மற்றும் வெளிச்சந்தை மின் கொள்முதல் :
தமிழகத்தில் மின்சாரத் துறை செயல்படும் விதத்தையும் அவர் கடுமையாகக் கேள்வி எழுப்பினார். "மாநிலத்தில் எங்குமே மின்வெட்டு இல்லை என்று மின்சாரத் துறை அமைச்சர் ஒருபுறம் கூறி வருகிறார். ஆனால் அதே நேரத்தில், மாநிலத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனால் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க இருப்பதாகவும் அரசு அறிவிக்கிறது. தமிழ்நாட்டில் மின் வெட்டே இல்லை என்றால், எதற்காக வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டும்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
மின்சாரக் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மக்களிடையே பொய்யான வாக்குறுதிகளை அளித்து தவெக அரசு காலத்தை கடத்தி வருகிறது என்றும் அவர் தனது பேட்டியில் குற்றம் சாட்டினார்.
சந்தி சிரிக்கிறது :
தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற இந்த நான்கு மாதங்களில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சட்ட ஒழுங்கு என்பதே சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்காத நாளே இல்லை என்னும் அளவிற்கு ஆகிய விட்டது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.