தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Su.tha Arivalagan
Aug 06, 2026,01:08 PM IST

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றி கழக (தவெக) அரசு தாக்கல் செய்துள்ள இந்த வேளாண் பட்ஜெட், விவசாயிகளுக்கு எந்தவித நன்மையையும் அளிக்காத முற்றிலும் ஏமாற்றமளிக்கும் ஒரு பட்ஜெட் என அவர் சாடியுள்ளார்.


“வேளாண் பட்ஜெட் எனும் நாடகம்”


இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழக விவசாயிகள் இந்த வேளாண் பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தவெக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், விவசாயிகளை அப்பட்டமாக ஏமாற்றும் ஒரு முயற்சியாகும். 'வேளாண் பட்ஜெட்' என்ற பெயரில் ஒரு நாடகத்தைத்தான் சட்டமன்றத்தில் அரங்கேற்றியுள்ளனர்" என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.




மேலும் தொடர்ந்த அவர், "சட்டமன்றத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகச் சாதனைகள் என்ற பெயரில் ஏதோ வாசிக்கப்பட்டதுதான் மிச்சம். மற்றபடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலோ, அவர்களின் அடிப்படை சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலோ எந்தவொரு உறுதியான திட்டமும் இதில் இடம்பெறவில்லை. கடந்த கால ஆட்சியைப் போலவே தவெக அரசும் விவசாயிகளை ஏமாற்றும் விதமாகவே இந்த வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது" என்றார்.


நெல்கொள்முதல் நிலையங்கள் குறித்த விமர்சனம்


நெல்கொள்முதல் நிலையங்களின் நிலைமை குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கடந்த கால ஆட்சியில் நெல்கொள்முதல் நிலையங்களில் என்ன மோசமான சூழ்நிலை நிலவியதோ, அதே நிலைமைதான் தற்போதும் தொடர்கிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க முடியாமல் அலையும் அவலநிலை மாறவில்லை.


நெல்கொள்முதல் நிலையங்களில் தார்ப்பாய் (Tarpaulin) வழங்‌கப்படுவதாகத் தவெக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெறும் அறிக்கையளவில் சொன்னால் போதாது, அதை உண்மையாகவே விவசாயிகளுக்குக் கொடுத்தால்தான் நிஜம். விவசாயிகளின் நன்மையைக் கருத்தில் கொண்டு, வாக்குறுதி அளித்தபடி தார்ப்பாய்களையாவது அரசு உடனடியாக வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.


மொத்தத்தில், 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிய, வெற்று வார்த்தைகளால் நிரப்பப்பட்ட ஒரு பட்ஜெட் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.