கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Apr 21, 2026,04:53 PM IST

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியான கூடுதல் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 297 வாக்குறுதிகளுடன் சேர்த்து, மக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை :


தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது தேர்தல் அறிக்கையை ஏற்கனவே விரிவாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி, தற்போது முக்கிய கூடுதல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளார்.தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய சிறிது நேரமே உள்ள நிலையில், கடைசி நேரத்தில் கூடுதல்  வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். 


இது குறித்து அவர் கூறுகையில், "ஏற்கனவே 297 தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது மக்களின் கோரிக்கைகளை ஏற்று, விவசாயிகளின் நலன் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைகளை உள்ளடக்கி கூடுதல் வாக்குறுதிகளை வெளியிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


 1. மாம்பழத்திற்கு ஆதரவு விலை :




விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாம்பழத்திற்குத் தகுந்த ஆதார விலை (Minimum Support Price) நிர்ணயம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி விவசாயிகள் லாபம் பெற வழிவகை செய்யப்படும்.


2. கலாச்சார பாதுகாப்பு: 


கிருஷ்ணகிரியில் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வரும் பாரம்பரிய அத்துக்கட்டு பண்டிகை, இனி வரும் காலங்களில் எவ்வித தடையுமின்றி முறையான பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இது அப்பகுதி மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


அதிமுகவின் தேர்தல் வியூகம் : 


ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 297 வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி, விலையில்லாப் பொருட்கள் எனப் பல நலத்திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் வாக்குறுதிகள், குறிப்பாக விவசாய மற்றும் கிராமப்புற வாக்குகளை அதிமுக பக்கம் ஈர்க்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. மக்களின் தேவைகளை உடனுக்குடன் உணர்ந்து, அதற்கேற்ப தேர்தல் அறிக்கையில் மாற்றங்களையும் சேர்க்கைகளையும் செய்து வரும் அதிமுகவின் இந்தச் செயல்பாடு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.