கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
சென்னை: எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், இபிஎஸ் முதல்வர் ஆகியிருக்க முடியாது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கொச்சைப்படுத்தியவர் இபிஎஸ். இபிஎஸ் கொல்லைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் என்பது நாடறிந்த ஒன்று என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக சமீபத்தில் அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார் முன்னாள் அமைச்சரும், அதிமுக.,வின் மூத்த நிர்வாகியுமாக இருந்த செங்கோட்டையன். அதன்பின்னர் தேவர் ஜெயந்தி விழாவிற்கு சென்ற போது, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஒன்று சேர்ந்தனர். இதைத் தொடர்ந்து, முன்னாள் எம்பி சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 12 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் பேசியுள்ளார். அப்போது செங்கோட்டையன் பேசுகையில், அதிமுக மீண்டும் வெற்றிபெற வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றேன். அதற்கு பிறகு கழக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன். யார் என்னிடம் பேசினாலும் நடவடிக்கை எடுக்கும் நிலை இன்று உள்ளது. நிர்வாகிகள் நீக்கம் அதிமுகவை பலவீனப்படுத்தும் செயல்.
எதற்கெடுத்தாலும் சிபிஐ என்று கேட்கும் எடப்பாடி பழனிசாமி கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து இபிஎஸ், சிபிஐ விசாரணையை ஏன் கோரவில்லை. என்னை பி டீம் என்றார்கள். உண்மையில் யார் பி டீம் என்பதனை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். ஓபிஎஸை 3 முறை முதல்வராக்கிய ஜெயலலிதா, இபிஎஸ்ஸை ஏன் முதல்வர் ஆக்கவில்லை. நான் முன்மொழியவில்லை என்றால் இபிஎஸ் முதல்வர் ஆகியிருக்க முடியாது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கொச்சைப்படுத்தியவர் இபிஎஸ்.
இபிஎஸ் கொல்லைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் என்பது நாடறிந்த ஒன்று. டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்களால் முதல்வர் ஆனபிறகு, அவரையும் கட்சியில் இருந்து நீக்கினார். இபிஎஸ்சின் மகன், மருமகன், மாப்பிள்ளை ஆகியோர் தான் கட்சியை நடத்தினர். ஒருவர் முன்னேற தன் காலில் நடந்து செல்ல வேண்டும். பிறரின் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது. அவர் உழைத்தவர்களை விட்டு விட்டு பணக்காரர்களுக்கு எம்பி சீட் கொடுத்தார். நான் கோபிச்செட்டி பாளையத்திற்கு ஏதும் செய்யவில்லை என்று இபிஎஸ் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜகவின் உறவை முறித்தார். 2031 வரை பாஜவுடன் கூட்டணியே கிடையாது என்றார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்திக்கவே தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்றேன். பாஜவினர் தான் என்னை அழைத்து, பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை செய்யச் சொன்னார்கள். சட்டமன்றத்தில் இபிஎஸ் பின்னால் தான் உட்கார்ந்திருந்தேன். என்ன குறை என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.