அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!

Su.tha Arivalagan
May 21, 2026,11:31 AM IST

சென்னை : எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு இன்று பதவியேற்றுள்ள தமிழக அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. இது அதிமுக அதிருப்தி தரப்பிற்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் சட்ட சிக்கல் நீடிப்பதால் அவர்களுக்கு இடமில்லை என்று கூறப்படுகிறது.


இன்னும் 2 அமைச்சர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்பதாலும் அந்த இடங்கள் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுவதால் விஜய் அமைச்சரவையில் அதிமுக குழுவுக்கு இடமில்லை என்பது உறுதியாகியுள்ளது. அப்படியே அதிமுக குழுவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றால் தவெக அமைச்சர்கள் சிலரை நீக்கி விட்டுத்தான் சேர்க்க முடியும் என்பது முக்கியமானது.


தமிழக சட்டசபை தேர்தலில் பெற்ற தோல்விக்கு பிறகு அதிமுக.,வில் பல குழப்பங்கள் நீடித்து வருகிறது. அதிமுக.,வில் இருந்து மூத்த உறுப்பினர்கள் பலரின் விலகல், பலரது நீக்கம் போன்ற நிகழ்வுகளால் இன்னும் குழப்பமான, பதற்றமான சூழலிலேயே அதிமுக இருப்பதை காட்டுகிறது. தேர்தலில் அதிமுக பெற்ற தோல்விக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தவறான அணுகுமுறை தான் காரணம் என எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தலைமையிலான 20 க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தி, தனி அணியாக பிரிந்து சென்றனர். 




தனி அணியாக பிரிந்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 25 பேர், அதிமுக தலைமையின் உத்தரவை மீறி, சட்டசபையில் தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதனால் அவர்கள் அனைவரின் மாவட்ட செயலாளர்கள் பதவியையும் பறித்து உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கிடையில் தனக்கு ஆதரவு அளித்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இது அதிமுக.,விலும், தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசப்பை ஏற்படுத்தியது. பதவிக்காக தவெக.,விற்கு சிலர் ஆதரவு தருகிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனால் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்களை வைத்திருக்கும் எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு விஜய், அமைச்சர் பதவி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.


இதை உண்மை என உறுதி செய்யும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, தங்களுக்கு ஆதரவு அளித்த விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதோடு அதிமுக அதிருப்தி அணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்ததுடன், சட்ட சிக்கல் வந்தால் அதை சி.வி.சண்முகம் சந்தித்து கொள்வார் என சூசகமாக தெரிவித்தார். இதனால் அதிமுக.,விற்கு அமைச்சரவையில் இடம் தரப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் தீயாய் பரவியது. இதனால் கோபமடைந்த இடதுசாரிகள், அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றால் தவெக.,விற்கு தாங்கள் அளித்த ஆதரவு குறித்து மறு பரிசீலனை செய்வோம் என்றார்கள்.


இதனால் தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்கும் விழா கவர்னர் மாளிகையில் இன்று காலை நடைபெறும் என கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டதுடன், அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் பட்டியலையும் வெளியிட்டது. இதில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் யாரும் இடம்பெறவில்லை. மாறாக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தரப்பட்டது.


அமைச்சரவையில் 35 பேர் மட்டுமே இடம்பெற முடியும் என்ற நிலையில், ஏற்கனவே முதல்வர் பதவியேற்பு விழாவின் போது, முதல்வர் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்று 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளதால், தற்போது தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உள்ளது. மீதமுள்ள 2 இடங்கள் விசிக.,விற்கு ஒதுக்கப்படலாம் என்றும், திருமாவளவனும் தமிழக அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும் சொல்லப்படுவதால் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் இதுவரை இடம் தரவில்லை. இனியும் இடம் தருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.


காரணம், அதிமுக.,விற்கு அமைச்சரவையில் இடம் அளித்தால் இடதுசாரிகளின் ஆதரவை இழக்க நேரிடும். இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றால், விசிக.,வும் ஆதரனை வாபஸ் பெறும். அப்படி செய்தால் தவெக அரசு கவிழும் நிலை ஏற்படும். ஒருவேளை இவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றாலும், அதிமுக அதிருப்தி தர ஆதரவை வைத்து தவெக.,வால் ஆட்சியை தொடர முடியும். ஆனால் அப்படி செய்தால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுக.,வின் எதிர்ப்பையும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த காரணங்களை யோசித்து தான், விஜய் அதிமுக.,விற்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை என சொல்லப்படுகிறது.