செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் மறுத்தால்.. திமுக, தவெகவுக்கு சாதகமாகும் களம்!
சென்னை : அதிமுக.,வில் பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அப்படி முயற்சி எடுக்காவிட்டால் ஒத்த கருத்துடையவர்களை ஒன்று திரட்ட உள்ளதாகவும் கூறி உள்ளார். அதாவது, கட்சியில் தன்னை போலவே அதிருப்தியில் இருப்பவர்களை ஒன்று திரட்டும் வேலையை செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அப்படி செங்கோட்டையன் செய்தால் அது அதிமுக.,வை உடைக்கும் செயல் ஆகி விடும். இது 2026 சட்டசபை தேர்தலில் திமுக மிக எளிதாக, அமோக ஆதரவுடன் வெற்றி பெற வழிவகுத்து விடும். அது மட்டுமல்ல, விஜய்யின் தவெக 2வது இடத்திற்கு வந்து விடும். அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்படும் அவல நிலை ஏற்பட்டு விடும். அதற்கு பிறகு அதிலிருந்து மீண்டும் வந்து, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை பிடிப்பது என்பது அதிமுக.,விற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை கூட உருவாகி விடும். இது இபிஎஸ்.,க்கு மட்டுமல்ல, 50 ஆண்டுகளாக அதிமுக.,வில் இருக்கும் செங்கோட்டையனுக்கும் நன்றாகவே தெரியும்.
கட்சியை காப்பாற்ற வேண்டும், கட்சிக்கு பலம் சேர்க்க வேண்டும் என்பதற்காக சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் வெளியேற்றப்பட்டதாக இபிஎஸ் தரப்பு சொல்லும் காரணங்களை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செங்கோட்டையன் சொல்வது போல் அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டினால் அது கட்சியை பல துண்டுகளாக பிளவுபடுத்தும். ஏறக்குறைய கட்சியை உடைக்கும் செயல். இதை கண்டிப்பாக கட்சியில் உள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். அதை விட முக்கியமாக பாஜக இதை ஒரு போதும் விரும்பாது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிப்பது அதிமுக.,விற்கு எவ்வளவு முக்கியமோ, அதை விட அதிகமாக பாஜக.,விற்கு முக்கியம். தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்றால், இந்த தேர்தலில் அதிக ஓட்டுக்களையும், அதிகமான இடங்களையும் எப்படியும் பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அப்படி நடந்தால் மட்டும் தான், 2029 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிகமான எம்பி., சீட்களையும், 2031ல் தமிழகத்தில் ஆட்சியையும் பிடிக்க வேண்டும் என்ற பாஜக.,வின் எண்ணம் நிறைவேறும். அதனால் தமிழகத்தில் அதிமுக.,விற்கு ஆதரவாவும், திமுக.,விற்கு எதிராகவும் இருக்கும் ஒரு ஓட்டை கூட இழக்க பாஜக இடம் தராது.
மற்றொரு புறம், அதிமுக.,வை உடைத்து, அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டி, தனியாக ஒரு கூட்டணியை உருவாக்கி, ஓட்டுக்களை பெறும் அளவிற்கு செங்கோட்டையனுக்கு செல்வாக்கு கிடையாது என்பது அதிமுக, பாஜக, அதிமுக கட்சியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல செங்கோட்டையனுக்கும் தெரியும். ஒருவேளை அப்படி செய்யும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டால், கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக அவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலோ அல்லது இவராக வெளியேறினாலோ என்ன நடக்கும் என்பது செங்கோட்டையனுக்கு தெரியும்.
ஒருவேளை செங்கோட்டையனை இழுக்க, திமுக முயற்சி செய்யலாம். அப்படி திமுக பக்கம் சென்றால், செங்கோட்டையனால் செந்தில் பாலாஜி அளவிற்கு அமைச்சர் பதவியை பெற்று, செல்வாக்குடன் இருக்க முடியாது. காரணம் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையனை விட செல்வாக்கு மிக்கவர்கள் திமுக.,விலேயே நிறைய பேர் உள்ளனர். அதனால் திமுக பக்கம் சென்றாலும் அது செங்கோட்டையனுக்கு பலன் தராது. மாறாக திமுக வெற்றியை எளிதாக்கி, அதிமுக.,வை படுதோல்வி அடைய செய்த பழி செங்கோட்டையன் மீது வந்து விடும். இதை அவர் நிச்சயமாக விரும்ப மாட்டார்.
தற்போது நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை பலவீனமாக்கி வெளியேற்றப்பட்டுள்ள தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து ஒட்டுமொத்த அதிமுகவைுயும் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம், அதிமுகவுக்குள் அடுத்தடுத்து நடந்து வரும் இந்தக் குழப்பங்கள் திமுக, தவெகவுக்கு சாதகமாகி விடுமே என்ற கவலை அதிமுக தொண்டர்களுக்கு எழுந்துள்ளது.