அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

Su.tha Arivalagan
Dec 29, 2025,05:31 PM IST

மதுரை: எங்கள் கட்சி களத்தில் இல்லை என்ச் சொல்ல எவ்வளவு தைரியம். விஜய் நாவை அடக்கி பேச வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.


மதுரையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல அவசியமில்லை. வடிவேலு, நயன்தாரா வந்தால் கூட தாஜ் கூட்டம் கூடும். நடிகர் என்றால் கூட்டம் கூட தான் செய்யும். எல்லாரும் எம்ஜிஆர் ஆக மாற முடியாது. வானத்திற்கு ஒரு சந்திரன் என்றால், பூமிக்கு ஒரு ராமச்சந்திரன் மட்டுமே. சிவாஜி, டி.ராஜேந்தர், பாக்யராஜ், கமல் உள்ளிட்டோர் கட்சி ஆரம்பித்து என்ன நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 




விஜய்யிடம் சில கேள்விகளை கேட்கிறேன். இதுவரை எந்த இடைத்தேர்தலில் நின்றார். எந்த தேர்தலில் போட்டியிட்டார். என்ன மக்கள் பணியாற்றினார். இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். அதிமுக களத்திலேயே இல்லை என சொல்வது முட்டாள் தனத்திலும் முட்டாள் தனம். அப்படி சொல்ல விஜய்க்கு என்ன தைரியம் இருக்க வேண்டும். நாவடக்கம் தேவை. நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். எழுதி வைத்து கொள்ளுங்கள், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். தவெக கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது.


2026ல் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் ஆவார். தவறு செய்யும் அதிகாரிகள் நிச்சயம் சிறைச்சாலைக்கு செல்வார்கள். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன முகக் கவர்ச்சி. அடுக்கு மொழியிலா பேசுகிறார். அவர் நாட்டு நடப்பை சொல்கிறார். இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்கிறார். எம்.ஜி.ஆர் ஆக வேண்டும் என்றால் அனைவராலும் ஆக முடியாது. இவர் 1952ல் திமுகவில் சேர்ந்து, அந்த கட்சிக்காக உழைத்து தன் ரத்தத்தை வியர்வையாக சிந்தி நடித்து சேர்த்த பணத்தை ஏழை மக்களுக்காக அளித்தவர். அப்படி மக்கள் மனங்களில் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தேர்தலில் நிற்காத போது திமுகவில் சேர்ந்தவர். 1957ல் தான் தேர்தலில் நின்றனர். 1967ல் ஆட்சியை பிடித்தனர் என்று தெரிவித்துள்ளார்.