கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Sep 30, 2025,07:07 PM IST

சென்னை: கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரியை வைத்து விளக்கம் அளிப்பது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுள்ளார்.


இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:


கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.


தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? 




ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன? 


இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா? 


ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை; அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான்.மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது  மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.