ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!
சென்னை: சென்னையில், தமாகா நிறுவனர் ஜிகே மூப்பனார் நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய இபிஎஸ், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை தனது சகோதரர் என குறிப்பிட்டுள்ளார்.
த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் பாஜக தரப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பாஜக -அதிமுக கூட்டணி அமைத்திருந்தன. அப்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் தலைவர்களையும், எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்து பேசியதால், அதிமுக - பாஜக இடையே பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. அதன்பின்னர் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து பேசும் போது.அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகே கூட்டணி என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தது.
இதனையடுத்து, தமிழக பாஜக பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். புதிய பாஜக தமிழக தலைவராக நயினார் நகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமியும், அண்ணாமலையும் எலியும், பூனையுமாக இருந்து வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது ஒரே மேடையில் அண்ணாமலையும், எடப்பாடி பழனிச்சாமியும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
ஜி.கே.மூப்பனார் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றபோதும் இரண்டு பேரும் ஒன்றாகவே சென்றனர். எடப்பாடியும், அண்ணாமலையை அருகில் வந்து நிற்கும் படி கூற, அண்ணாமலையும் எடப்பாடி அருகில் நின்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை தனது சகோதரர் என குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.