அதிமுக.,வில் மீண்டும் பரபரப்பு: இபிஎஸ் கூட்டத்தை புறக்கணிக்க வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் முடிவு?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமையில் நாளை நடைபெறவிருக்கும் முக்கியக் கூட்டத்தைப் புறக்கணிக்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் அணி கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு :
அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மகளிர் அணி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்தைப் புறக்கணிக்க அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிருப்திக்கு என்ன காரணம்?
தவெக அரசுக்கு ஆதரவாக சடசட்பையில் ஓட்டளித்த எம்எல்ஏ.,க்களின் கட்சி பொறுப்புக்களை பறித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. பிறகு மீண்டும் கட்சியில் வந்த இணைந்த உடன் அவர்களுக்கு மீண்டும் கட்சி பொறுப்புக்கள் வழங்கப்பட்டது. கட்சியில் இருந்து விலகி சென்று, சமீபத்தில் மீண்டும் வந்துள்ள இணைந்துள்ள சில நிர்வாகிகளுக்கு மீண்டும் வழங்கப்பட்ட கட்சிப் பொறுப்புகள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
தங்களுக்கு உடன்படாத அல்லது தகுந்த ஆலோசனையின்றி மீண்டும் வழங்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளால் அதிருப்தியடைந்துள்ள வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு தங்களது கண்டனத்தையோ அல்லது விளக்கத்தையோ கோரி கடிதம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் அடுத்தடுத்து நகரும் அரசியல் காய்கள் :
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவின் உட்கட்சிப் பூசல்களும், தலைவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளும் அவ்வப்போது பேசுபொருளாகி வருகின்றன. தற்போது ‘மீண்டும்’ வெடித்துள்ள இந்த அதிருப்திப் படலம், நாளை நடைபெறும் மகளிர் அணி கூட்டத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியத் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பிற நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் கடிதம் அனுப்பும் பட்சத்தில், அது கட்சியில் புதிய திருப்பத்தையோ அல்லது உட்கட்சி மோதலையோ உருவாக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை அல்லது சம்பந்தப்பட்ட தலைவர்கள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்தின் போதே முழுமையான பின்னணி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎஸ்.,க்க எதிராக மீண்டும் எஸ்.பி.வேலுமணி தரப்பு போர்க்கொடி உயர்த்தி உள்ளதால், அடுத்ததாக எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்ய போகும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் பட்டியலில் இவர்களும் இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.