அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்
சென்னை : அதிமுக எம்எல்ஏ.,க்கள் பலரும் அடுத்தடுத்து தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாரபட்சம் இன்றி அனைத்து கட்சிகளின் நிலைப்பாடுகளிலும், கூட்டணியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக.,வில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, தற்போது வரை பரபரப்பு குறையாமல் இருந்து வருகிறது. தேர்தலில் பெற்ற தோல்விக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக எம்எல்ஏ.,க்கள் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.
எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியினர், கட்சி கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஓட்டளித்தனர். இதனால் அவர்களின் கட்சி பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் மரகதம் குமாரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பைய்யா ஆகிய 4 பேரும் தங்களின் எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்தனர். இருந்தாலும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. தவெக அரசு குதிரை பேரம் நடத்தியதாக ஆளுநரிடமும் புகார் அளிக்கப்பட்டது.
இதனால் அதிமுக.,வில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டவர்களில் பலர் மீண்டும் அதிமுக.,வில் வந்து இணைந்தனர். மீண்டும் இணைந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்க மனமில்லாமல் சி.வி.சண்முகம் தனித்து செயல்பட்டு வருகிறார். அவருடன் இருந்த சி.விஜயபாஸ்கரும் தனது விராலிமலை எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் மீண்டும் இணைந்து, கட்சி பொறுப்பு வழங்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரும் இன்று தனது எம்எல்ஏ.,பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக.,வில் 6 பேர், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு என தற்போது வரை 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ.,க்களின் பலம் 36 ஆக குறைந்துள்ளது. இதனால் தாங்கள் இழந்த 6 எம்எல்ஏ.,க்களின் பலத்தையும் மீண்டும் பெறுவதற்காக நடக்க இருக்கும் இடைத் தேர்தலில் அதிமுக முழு முனைப்புடன் செயல்பட்டு வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான தவெக.,வும் தங்களின் பலத்தை அதிகரித்து, பெரும்பான்மையை பெறுவதற்காகவும் அதிக எம்எல்ஏ.,க்களை பெறுவதற்காகவும் முழு வீச்சில் களமிறங்கும். இது அதிமுக.,விற்கு இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஒருவேளை இடைத்தேர்தலில், இழந்த 6 எம்எல்ஏ., இடங்களையும் பெற அதிமுக தவறி விட்டால் சட்டசபையில் அதிமுக.,வின் பலம் குறையும். இது அதிமுக.,வின் எதிர்காலத்தையும் பலவீனப்படுத்த வாய்ப்புள்ளது.