டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் மாத இறுதியில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அவர் மேற்கொள்ள உள்ள பிரசாரப் பயணத்தின் விரிவான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றொரு புறம் தேர்தல் கமிஷனும் தங்கள் பங்கிற்கு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, இறுதி வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. இதில் பெயர்கள் சேர்க்க, நீக்க இதுவரை 1.53 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிகிறது. அதற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படலாம். இதனால் அதற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரங்களை முடித்து விட்டு, விரைவில் கூட்டணிகளை இறுதி செய்து, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பொதுக்கூட்டங்களை நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
அதிமுக-பாஜக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்பதை முடிவு செய்வதற்காக தமிழகத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயலுடன் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இதில் ராமதாஸ்-அன்புமணி இருவரையும் ஒன்றிணைத்த பாமக.,விற்கு 23 இடங்கள் ஒதுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. நேற்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இன்று, இபிஎஸ்.,ன் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சார பயண அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பிரசாரப் பயண விபரம்:
டிசம்பர் 28: திருத்தணி மற்றும் திருவள்ளூர்
டிசம்பர் 29: திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர்
டிசம்பர் 30: கும்மிடிப்பூண்டி
இந்த மூன்று நாள் பயணத்தின் போது, கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் எதிர்கால நோக்கங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.