அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்

Su.tha Arivalagan
Jan 17, 2026,05:16 PM IST

சென்னை : இன்று ஒரே நாளில், ஒரே சமயத்தில் தமிழகத்தின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டுமே பல்வேறு அதிரடியான தேர்தல் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளன. இவை மக்களை கவருமா என்பதை தாண்டி, சாத்தியமானவை தானா என்பதை முதலில் ஆராய வேண்டும். அப்போது தான் இவை வெற்றிக்கான அறிவிப்புக்களா அல்லது வெற்று அறிவிப்புக்களா என்பது புரியும்.


திமுக தேர்தல் வாக்குறுதி :




முதலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 2 அறிவிப்புக்களை பற்றி பார்ப்போம். ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக மாடுகளை பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு அரசு வேலை மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் அரசு வேலை வழங்கப்படும் என இரண்டு அறிவிப்புக்களை வெளியிட்டார். ஏற்கனவே அரசுத்துறையில் இருப்பவர்களுக்கே நிரந்த பணி வழங்க முடியாமல் அரசு போராடிக் கொண்டிருக்கிறது. பணி நிரந்தரம் கேட்டு ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதையும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மற்றொரு புறம் அரசு பணியிடங்கள் பலரும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்ற உண்மையையும் மறுக்க முடியாது.


மாடுபிடித்தால் அரசு வேலையா?


அரசு துறையில் இருக்கும் பணியிடங்கள் என்பதை தாண்டி இதை மற்றொரு சிக்கலும் உள்ளது. ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்க வரும் வீரர்களில் ஒரு சிலர் மட்டுமே பட்டதாரிகளாக இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் 12ம் வகுப்பு கூட முடிக்காதவர்களாகவே இருப்பார்கள்.  பள்ளி படிப்பை முடிக்காத காரணத்தால் இவர்களில் பெரும்பாலானவர்கள் தினக்கூலிகளாக மட்டுமே பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு வேலைக்கும் அடிப்படை தகுதி இளநிலை பட்டம் என்ற நிலை இன்று உருவாகி விட்டது. ஒரு வாதத்திற்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்ததன் அடிப்படையில் அரசு வேலை வழங்குகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகளுக்கு பல ஆண்டுகளுக்கு படித்து, பல முறை தேர்வு எழுதி முயற்சித்து வருபவர்களின் நிலை என்ன ஆகும்? ஏற்கனவே 100 பணியிடங்களுக்கு லட்சக்கணககானவர்கள் போட்டி தேர்வு எழுதும் நிலை உள்ளது. இந்த சமயத்தில் மாடு பிடித்தால் அரசு வேலை என்றால் அரசு வேலைக்கு மாடு பிடிக்க தெரிந்தால் போதுமா என்ற கேள்வி நிச்சயம் எழும்.


அதிமுக தேர்தல் வாக்குறுதி :




அடுத்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த 5 அறிவிப்புக்களுக்கு வருவோம். இவற்றை ஆழமாக கவனித்தால் எதுவுமே புதிய அறிவிப்புக்கள் கிடையாது. பெண்களுக்கு உதவித்தொகை, சொந்த வீடு, பெண்களுக்கு ஸ்கூட்டம் வாங்க மானியம் இவை அனைத்தும் திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் பல காலமாக இருப்பது தான். 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு விட்டது. அதை அப்படியே கொஞ்சம் மாற்றி 150 நாட்கள் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.


இலவச பஸ் பயணமா?


இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்புக்களில் முக்கியமானது அரசுப் பஸ்களில் ஆண்களுக்கும் இலவச பயணம் என்பது தான். தற்போது பெண்கள், திருநங்கைகளுக்கு இலவசம் என்பது நடைமுறையில் உள்ளது. இனி ஆண்களுக்கும் இலவசம் என்றால் அரசு பஸ்களில் யாருக்கும் கட்டணம் கிடையாது என்பது தானே இதன் அர்த்தம்? ஏற்கனவே தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால் தான் பழைய பஸ்களையே இயக்குவதாக கூறுகிறார்கள். மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்ததால் வருமானம் குறைந்து ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வு பெற்றவர்களுக்கான தொகை போன்றவற்றை வழங்க முடியாமல் அரசு திண்டாடி வருகிறது. இந்த கோரிக்கைகளுக்காக போராட்டத்தையும் சமீபத்தில் அறிவித்தார்கள். 


ஏற்கனவே அரசு நிதி நெருக்கடியில் உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் இந்த இரண்டு கட்சிகளில் அடுத்ததாக யார் ஆட்சிக்கு வந்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மிகப் பெரிய நிதி நெருக்கடி, கடன் சுமையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஒன்று இரண்டு அறிவிப்புகளே நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கும் நிலையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடும் அறிவிப்புக்களை இவர்கள் எப்படி நிறைவேற்றுவார்கள்?