புற்றுநோயின் வேதனையை விட.. மருத்துவமனையின் நோகடிக்கும் போக்கு.. நோயாளிகள் புலம்பல்!
சென்னை: சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையைக் கொடுத்து வருவது ஒருபக்கம் இருந்தாலும் கூட அங்குள்ள சிலரின் அலட்சியப் போக்கால் நோயாளிகள் பலரும் பெரும் வேதனைக்குள்ளாவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு நோயாளியே நம்மிடம் புலம்பித் தள்ளி விட்டார்.
அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு பல ஊர்களிலிருந்தும், ஏன் வெளிமாநிலங்களிலிருந்தும் கூட நோயாளிகள் சிகிச்சைக்காக, அறுவைச் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் அங்குள்ள சில ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் நோயாளிகள் பலரும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி மன வேதனையுடன் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:
நான் ஒரு கேன்சர் நோயாளி. இந்த மருத்துவமனையில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டும் காணாது போக மனமின்றித் பதிவு செய்கிறேன். காரணம் உலகின் பல நாடுகளில் இருந்தும் இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் படும் துன்பம் கொஞ்சநஞ்சமல்ல.
முதலாவதாக காலையில் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தமது OP புத்தகத்தைப் பதிவு செய்தாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கிருக்கும் சில செவிலியர்கள் மைக்கில் நோயாளியின் பெயர் சொல்லி அழைத்த பிறகு குறிப்பிட்ட நோயாளி மருத்துவர் அறைக்குச் சென்றாலும் அங்கே செவிலியர்கள் சிலரின் அலட்சியப் போக்கால் இதர நோயாளிகளின் மருத்துவப் பதிவேடு மாறிவிடுகிறது. இதன் காரணமாக மருத்துவரும் பைல் குழப்பத்தால் எந்த நோயாளிக்கு எந்த விதமான மருத்துவம் மேற்கொள்ள வேண்டும் என்ற குழப்பநிலைக்கு ஆளாகிறார்.
இது போன்ற நிலமையில் குறிப்பிட்ட நோயாளி ஒருவரின் மருத்துவ கட்டணத்தை அதே பெயர் கொண்ட நோயாளி, அல்லது வேறொரு நோயாளியின் தலையில் கட்டி விடுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் படித்த அட்டென்டராக இருந்தால் நோயாளியின் பில்லைச் சரிபார்த்துவிட்டுப் பணத்தைக் கட்டுகிறார்கள். படிக்காத அட்டென்டராக இருந்தால் வேறுவழியின்றிப் பில்லில் இருக்கும் தொகையை அவர்கள் அறியாமலேயே கட்டி விட்டுச்செல்கிறார்கள்.
சிலநேரங்களில் கீமோ, இல்லை ரேடியேஷன் சிகிச்சைக்குப் பணம் செலுத்தி முறையான ரசீது வாங்கியபிறகும் பேலன்ஸ் தொகை இருப்பதாகச் சொல்லிப் பணத்தைக் கறந்து விடுகிறார்கள் அந்த மருத்துவமனையின் அலுவலக ஊழியர்கள். எதேச்சையாக இந்த நிகழ்வைக் கண்டறிந்த நோயாளி ஒருவரின் கணவர் தான் கட்டவேண்டிய பணத்திற்கும் மேலாக ஐம்பத்தெட்டு ஆயிரம் ரூபாய் தன்னிடமிருந்து வசூலித்ததாகத் தகுந்த ரசீதுடன் அலுவலக கணக்காளரைக்கேட்க அந்த நபரோ பரவாயில்ல விடுங்க. அடுத்த முறை கீமோதெரபிக்கு வரும் போது இந்தத் தொகையைக் கழித்துக் கொள்கிறோம் என்று ஒரு மன்னிப்பு கூடக் கேட்காமல் அந்த அலுவலக கணக்காளர் நடந்து கொண்டதைப் பார்த்து கலங்கிவிட்டார் அந்த நண்பர்.
இந்த மருத்துவமனை நோயாளிகள் பலருக்கும் மத்திய கைலாஷில் உள்ள பழைய மருத்துவமனையில் தான் கீமோதெரபி சிகிச்சை தருவது வழக்கம். அங்கு வரும் நோயாளிகளின் மருத்துவ பதிவேடு புத்தகத்தை அடையார் மெயின் மருத்துவமனையில் வைத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு ஃபைலை மத்திய கைலாஷ் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்காத காரணமாக அங்கும் நோயாளிகள் பலரும் மாலை ஆறு மணிக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர் கதையாகி வருகிறது.
தவிர மத்திய கைலாஷ் மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறை மிக மிக மோசமான நிலையில் உள்ளது.
அடையார் மெய்ன் மருத்துவமனையிலோ நீண்ட நேரமாகக் காத்திருக்கும் நோயாளிகள் உட்காருவதற்கு, சாப்பிடுவதற்கு, ரெஸ்ட் எடுப்பதற்கு என்று நல்ல சேர்கள் கூடக் கிடையாது. பலமுறை வெல்டிங் செய்த சேர்களையே மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தும் நிலையில் நோயாளிகள் பலரும் சேரின் வெல்டிங் உடைந்து கீழே விழும் நிலைக்கு ஆளாகிறார்கள். உச்ச கட்டக்கொடுமை என்னவென்றால் ஆபரேஷன் முடிந்து செல்லும் நோயாளிகளுக்கு இங்குள்ள சில மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி நோயாளிகளிடமோ, அல்லது அட்டன்டரிடமோ தெரிவிக்காத காரணத்தால் மறுமுறை பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் பலரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி, சீழ் வைத்து சிலநேரம் புழு வைத்த நிலமையில் வெகு தூரத்தில் இருந்து உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு இங்கே வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
மருத்துவ பரிசோதனைகள், பிளட் டெஸ்ட், எக்கோ, ஈ. ஈ. ஜி, இன்னும் பெட் ஸ்கேன்,மருத்துவக் கட்டணம், மருந்து, மாத்திரை,சி. டி. ஸ்கேன் இதற்கு ஆகும் செலவுகள் மற்ற தனியார் மருத்துவமனையைவிட இங்கு பல மடங்கு அதிகம். மேலும் நோயாளி ஒருவர் தான் சிகிச்சை பெறும் குறிப்பிட்ட மருத்துவரின் சிகிச்சை அவருக்கு திருப்தியளிக்காத போதிலும் தொடர்ந்து அவரே விரும்பினாலும் அதே பழைய மருத்துவரிடம் தான் சிகிச்சை பெறலாமே தவிர மறந்தும் ஒரு சந்தேகம் கேட்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கூட மற்றொரு மருத்துவரை அணுகக்கூடாது என்பதில் இங்குள்ள செவிலியர்கள் கண்டிப்பாக நடந்து கொள்கிறார்கள்.
எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை இங்கு தரப்படும் உணவு. காலை இரவு என்று கோதுமைக்கிச்சடி, சேமியா கிச்சடி, பொங்கல் என்று தினமும் ஒரே மாதிரி உணவைக்கொடுத்து கொள்ளாமல் கொல்கிறார்கள். பல நேரங்களில் இங்கே குடிக்க தண்ணீரும் கிடைக்காது. இவர்கள் நடத்தி வரும் கேன்டீன் உணவும் சொல்லிக்கிறமாதிரி இல்லை. இப்படி இந்த மருத்துவமனையைப் பற்றிப் பேசும்போது நிறைகளை விடவும் குறைகள் தான் மனதை நெருடுகிறது.
உலகெங்கிலும் இருந்து மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளிடம் பலபல லட்சங்களைக் கறப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த மருத்துவமனையின் சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தி நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் தரவேண்டும். பணவேட்டை நடத்துவதை விட்டு சேவை எண்ணத்தில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை அனுப்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
அடையார் புற்றுநோய் மருத்துவமனை என்றதுமே டாக்டர் சாந்தாதான் நினைவுக்கு வருவார். அத்தனை அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர் அவர். அப்படிப்பட்டவரின் மருத்துவமனையில் இத்தனை குளறுபடிகள் இருப்பது உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருக்கிறது. சரி செய்தால் புண்ணியமாகப் போகும்.