17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
சென்னை: 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் புதிய டபுள் டெக்கர் சேவை 2 மாதங்களில் தொடங்கும் என மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டுகளில் மக்கள் மிகவும் வியந்து பார்த்து வந்த டபுள் டெக்கர் சேவை, சென்னையில் 2 மாதங்களில் தொடங்கும் என மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, 2 புதிய மின்சாரத்தில் இயங்கும் டபுள் டெக்கர் பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் வார நாட்களில் முக்கிய வழித்தடங்களிலும், வார இறுதி நாட்களில் பாரம்பரிய வழித்தடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாகவும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு தற்போது பேருந்து சேவையை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பயணிகளின் தேவைக்கேற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, சென்னையில் 2 மாதங்களில் டபுள் டெக்கர் பேருந்துகள் மீண்டும் வலம் வரப்போனதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான பணிகள் கடந்த 2023ம் ஆண்டு முதலே தொடர்ந்து நடந்து வருகிறது. இதனையடுத்து, தற்போது சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அரசு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரையை அனுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில், பேருந்தை இயக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.