CM Vijay to visit Karur: கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. பாதுகாப்புக்கு 6500 போலீசார் குவிப்பு

Su.tha Arivalagan
Jul 10, 2026,10:21 AM IST

கரூர்: தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.


அங்கு நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். முதலமைச்சரின் இந்த வருகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு தான் போட்டியிட்டு வெற்றி பெற்று, பிறகு ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார். அதன் பிறகு இன்று (ஜூலை 10, 2026) அவர் கரூர் மாவட்டத்திற்குச் செல்கிறார். முதலமைச்சராக அவர் கரூர் மாவட்டத்திற்குச் செல்லும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இது என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் அவரது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் ஏற்பட்டுள்ளது.




இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது பிரச்சாரத்திற்காக விஜய் கரூர் சென்றிருந்தார். இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர், அரசுத் தரப்பில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், முடிவுற்ற திட்டங்களைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கவும் உள்ளார். மேலும், பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கவிருக்கிறார்.


முதலமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கரூரில் பாதுகாப்புப் பணிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, மொத்தம் 6,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


முதலமைச்சரின் கான்வாய் (வாகன அணிவகுப்பு) செல்லும் பாதைகள் அனைத்தும் முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவர் பயணிக்கும் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு, பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.முக்கிய இடங்களில் தற்காலிகக் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


முதலமைச்சரை வரவேற்பதற்காக கரூர் மாவட்ட எல்லையான புகழூர் முதல் நகரின் முக்கிய வீதிகள் வரை சாலையின் இருமருங்கிலும் அவரது கட்சியினரும் பொதுமக்களும் திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகின்றனர். நகரமே விழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு கரூரின் முக்கிய சாலைகளில் இன்று தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் இந்த முதல் கரூர் வருகை, மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் புதிய வேகத்தைக் கொடுக்கும் எனப் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.