பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
சென்னை: தமிழ்நாடு அரசியலில் திடீரென பலத்த அரசியல் திருப்பங்களும், பரபரப்புகளும் தொற்றிக் கொண்டுள்ளன.
தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை எதிர்க்கட்சியான திமுக, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து சந்தித்து புகார் மனுக்களை அளித்து வந்துள்ளது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்துப் புகார் அளிக்க பாஜக களமிறங்கியது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று காலையிலேயே பொறுப்பு ஆளுநர் அர்லேகரைச் நேரில் சந்தித்தனர்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் விரிவான மனு ஒன்றை அளித்துள்ளனர்.அமைச்சர் விஸ்வநாதன் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதால் அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
தவெக அரசு மீது திமுக பரபரப்பு புகார்:
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெளிப்படையாகவே குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக திமுக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எம்பி வில்சன் ஆகியோர் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில், தவெக கட்சித் தரப்பு மிக வெளிப்படையான முறையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் திமுகவின் முக்கிய நிர்வாகியான அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்து காவல்துறை மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும் திமுக தரப்பில் மிகக் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மாலையில் ஆளுநரைச் சந்தித்த அதிமுக!
இதே குதிரை பேர விவகாரம் தொடர்பாக அதிமுகவும் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளது. அதிமுகவின் தலைமைச் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்பி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தில் நடைபெற்று வரும் குதிரை பேர விவகாரங்கள் குறித்து அதிமுக சார்பில் விரிவான புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குதிரை பேரம் நடத்தி அதிமுக எம்எல்ஏ.,க்களை தவெக ராஜினாமா செய்ய வைத்து வருவதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரே நாளில் குதிரை பேரக் குற்றச்சாட்டை முன்வைத்து திமுக மற்றும் அதிமுகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து பாஜகவும் ஆளுநரைச் சந்தித்து வருவது தவெக அரசுக்கு நெருக்கடியை தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.