திருப்புவனம் இளைஞர் கொலை : தவெக போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி

Su.tha Arivalagan
Jul 07, 2025,03:50 PM IST

சென்னை : போலீஸ் விசாரணையின் போது திருப்புவனம் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்த்து விஜய்யின் தவெக போராட்டம் நடத்துவதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்ம கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் நகை திருட்டு புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். அஜீத்குமாரின் மரணத்திற்கு போலீசார் தாக்கியதே காரணம் என தெரிய வந்ததை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 12ம் தேதி விஜய்யின் தவெக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.




ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து காவலாளி அஜீத்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி தவெக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவசர வழக்காக விசாரிக்க கோர்ட் மறுத்து விட்டது. இருப்பினும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.




தவெக தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து தவெக ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை 12ம் தேதி சென்னை சிவானந்த சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.