நிதி, மின் துறைகளை தொடர்ந்து விரைவில் வேளாண் துறைக்கும் வெள்ளை அறிக்கை
சென்னை : தமிழகத்தின் நிதித்துறை மற்றும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகள், கடன் சுமை, வரவு-செலவு உள்ளிட்டவைகள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அந்தந்த துறை அமைச்சர்கள் வெளியிட்டுள்ள நிலையில் அடுத்ததாக வேளாண் துறைக்கும் தனியாக வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக அந்த துறையின் அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்ற அன்று, அரசின் நிலைமை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவும், வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காகவும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்தார். அதன் படி சமீபத்தில் நிதித்துறைக்கான வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மின்சார வாரியத்திற்கான தனியான வெள்ளை அறிக்கையை அந்த துறையின் அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார்.
இந்நிலையில் வேளாண் துறைக்கும் தனியான வெள்ளை அறிக்கையை விரைவில் வெளியிட தவெக அரசு முடிவு செய்திருப்பதாக வேளாண் துறை அமைச்சர் வினோத், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையில் தேவைப்பட்டால் பத்திரப்பதிவுத்துறை சார்ந்த வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயாராக இருப்பதாக அந்த துறையின் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு சர்வர் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறையில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு துறையில் தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய், வெள்ளை அறிக்கை என்று சொன்னதும் பலரும் ஏதோ அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ஒரு அறிக்கையை வெளியிடுவார்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது தவெக அரசு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறது. தவெக.,வின் இந்த வெள்ளை அறிக்கைக்கு திமுக.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் பதிலளித்து வருகிறார்கள்.
இனி வரும் நாட்களில் மீதமுள்ள துறைகளுக்கும் தனித்தனியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், கல்வித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் முந்தைய திமுக அரசு மீது ஊழல் புகார்கள் சொல்லப்பட்டு வருவதால் அந்த துறைகளுக்கும் வெள்ளை அறிக்கையை தவெக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.