மக்களே உஷார்...வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலையும் கிடுகிடுவென உயர்கிறது
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான நோய்த் தாக்குதலால் தக்காளி விளைச்சல் பாதியாகக் குறைந்துள்ளதால், அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இதனால் வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலையும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அரசிராமணி, தேவூர், பூலாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தற்போதைய பருவநிலை மாற்றம் மற்றும் தொடர் நோய்த் தாக்குதலால் தக்காளி செடிகளின் இலைகள் கருகி, காய்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 5 டன் வரை தக்காளி மகசூல் கிடைத்து வந்த நிலையில், தற்போது நோய்த் தாக்குதல் காரணமாக ஏக்கருக்கு வெறும் 2 டன் மட்டுமே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். உரம், பூச்சிக்கொல்லி மற்றும் கூலி ஆட்களுக்கான செலவு கூட கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதால், அரசும் தோட்டக்கலைத் துறையும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சரஸ்வதியிடம் கேட்ட போது, நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள தக்காளித் தோட்டங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என்றும், விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தின் மற்ற ஊர்களில் தக்காளி விலை நிலவரம்:
விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்துக் குறைவு காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு சந்தைகளில் தக்காளி விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இன்றைய (நவம்பர் 21) நிலவரப்படி முக்கிய நகரங்களில் தக்காளி கிலோ ஒன்றின் விலை விவரம் பின்வருமாறு:
சென்னை (கோயம்பேடு): மொத்த விற்பனையில் கிலோ ரூ.27 முதல் ரூ.30 வரையும், சில்லறை விற்பனையில் ரூ. 35 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை: உசிலம்பட்டி மற்றும் பழங்காநத்தம் உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.42 வரை விற்கப்படுகிறது.
காரைக்குடி (சிவகங்கை): உழவர் சந்தையில் கிலோ ரூ.46 வரை விற்பனையாகிறது.
கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் உழவர் சந்தையில் கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்கப்படுகிறது.
தருமபுரி மற்றும் தேனி: உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.38 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சி மற்றும் சேலம்: திருவெறும்பூர் மற்றும் தம்மம்பட்டி உழவர் சந்தைகளில் கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது.
கள்ளக்குறிச்சி மற்றும் தூத்துக்குடி: உழவர் சந்தைகளில் கிலோ ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் உள்ளிட்ட முக்கிய உற்பத்திப் பகுதிகளில் விளைச்சல் சரிந்துள்ளதால், வரும் நாட்களில் தமிழக சந்தைகளில் தக்காளி வரத்து மேலும் குறைந்து, சில்லறை விலை உயரக்கூடும் என வியாபாரிகள் கணித்துள்ளனர்.
ஏற்கனவே தினசரி சமையலில் அத்தியாவசியாக பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.230 ஐ தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், தற்போது தக்காளியின் விலையும் உயர துவங்கி உள்ளது சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.