கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
சென்னை: கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக (தவெக) பொதுக்கூட்டத்தில் நேரிட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், அக்கட்சியின் தலைவர் விஜய்யை வரும் ஜனவரி மாதம் சிபிஐ (CBI) விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூருக்கு அருகிலுள்ள வேலுசாமிபுரத்தில் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.சிபிஐ அதிகாரிகள் இதுவரை சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உள்ளூர் காவல் துறையினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.
சமீபத்தில் தவெக-வின் உயர்மட்ட நிர்வாகிகள் டில்லிக்கு வரவழைக்கப்பட்டு, சிபிஐ அதிகாரிகளால் சுமார் 9 மணி நேரம் விசாரிக்கப்பட்டனர். கூட்டத்திற்கான அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட மேலாண்மை குறித்து அவர்களிடம் விரிவான கேள்விகள் கேட்கப்பட்டன.கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை தவெக.,வின் ஏற்கனவே சிபிஐ.,யிடம் அளித்துள்ளனர்.
விஜய்க்கு சம்மன் ஏன்? கட்சியின் தலைமை நிலையில் பொறுப்புக்கூறலை (Accountability) உறுதி செய்வதற்காக, அக்கட்சியின் தலைவரான விஜய்யிடம் 'நேரடித் தகவல்களை' (First-hand info) பெற சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதுவரை முறையான சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை என்றாலும், விசாரணையின் அடுத்த கட்டமாக ஜனவரியில் அவர் அழைக்கப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா? கட்சி நிர்வாகிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இருந்ததா? என்பது போன்ற கோணங்களில் சிபிஐ தனது விசாரணையை இறுதி செய்ய உள்ளது.