மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

Meenakshi
Jul 24, 2025,04:26 PM IST

மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 49 பேர் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் அகமதாபாத் நகரில் ஏற்பட்ட விமான விபத்து உலகையே கதிகலங்கச் செய்தது. இந்த விமான விபத்தில் ஒரு பயணியை தவிர்த்து மற்ற  242 பயணிகளும் உயிரிழந்தனர். அதுமட்டும்  இன்றி விமானம் விழுந்த மருத்துவக்கல்லூரி கட்டட விடுதியில் இருந்த மாணவர்களும் பலியாகினர். இந்த சம்பவத்தில் இருந்து மக்கள் வெளியே வருவதற்குள் தற்போது மீண்டும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது.




ரஷ்யாவில் இருந்து டின்டா பகுதிக்கு அங்கார ஏர்லைன்ஸ் நிறுவனத்திவ் ஏஎன் 24 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் டின்டா அருகில் சென்ற போது, திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு தூண்டித்ததாகவும், அதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தொடங்கியது. அந்த விமானம் மாயமானதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்,  சில நிமிடங்களிலேயே சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆமுர் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகின.


விமானம் நொறுங்கிய சில பாகங்கள் அந்த பகுதியில் கண்டறியப்பட்டன. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள், 6 விமான ஊழியர்கள் பயணித்த நிலையில், தற்போது விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கரும்புகையுடன் காட்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும், விபத்து பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுவினரை தற்போது ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.