பெண்களே படிங்க.. படிச்சாதான் உயர முடியும்.. பிறரை உயர்த்த முடியும்.. அகோர கெளரி சித்ராவின் அட்வைஸ்!
- தி.ந.அகோர கௌரி சித்ரா
என் தந்தை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தார் .அதனால் அடிக்கடி வேறு வேறு ஊர்களுக்கு பயணிப்போம். 70 - 75களில் எப்போது வேண்டுமானாலும் மாற்றல் போடுவார்கள். சில சமயங்களில் அரையாண்டு பரிட்சையின் போது கூட வேறு பள்ளியில் சேர நேரிடும்.
அப்படியும் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். எனக்கு 15 வயது ஆனதும் திருமணம் செய்ய முயன்றார்கள். நான் படிக்க தான் செய்வேன் என்று பிடிவாதம் செய்தேன். என் படிப்பு செலவுக்கு பணம் கொடுக்க மாட்டோம். உன்னால் முடிந்தால் படித்துக்கொள் என்றார்கள். நான் 10 வகுப்பு பொது தேர்வு எழுதவேண்டிய வருடம் காலையில் அருகில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் பெட்டி ஒட்ட வீட்டிற்கு வாங்கி வந்து ஒட்டுவேன். மாலை பள்ளி முடிந்துவரும் போது ஒரு கடையில் பேப்பர் அட்டை ஒட்ட பொருள் வாங்கி வந்து ஒட்டுவேன். இப்படியாக 12 ஆம் வகுப்பு வரை படித்தேன்.
கும்பகோணத்தில் என் கல்லூரி படிப்பை தொடர்ந்தேன். திருக்கடையூரில் இருந்து 2மணிநேரம் பயணம். ஒரு நாளைக்கு 4 மணிநேரம் போக வர. அப்படியும் படிப்பு செலவுக்காக மாலை வேலையில் டியூசன் எடுத்தேன். B.Sc முடித்தவுடனே என்னை ஒரு டியூசன் சென்டரில் வேலைக்கு கூப்பிட்டார்கள். அங்கும் வேலை வீட்டிலும் டியூசன் என தொடர்ந்தேன்.
அப்போது என்னை செம்பனார்கோயிலில் ஒரு பள்ளியில் வேலைக்கு கூப்பிட்டார்கள். அங்கு சேர்ந்தேன். பகலில் பள்ளியில் மாலை முதியோர் கல்வி இரவு வீட்டில் டியூசன் என தொடர்ந்தேன். இன்று நான் கற்ற கல்வியால் பலர் டாக்டர், இஞ்சினியர் ஆசிரியர் என பணிகளில் இருக்கிறார்கள். அன்று நான் பிடிவாதமாக கற்ற கல்வியால் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளேன். என் மாணவர்கள் இப்போது என்னை பார்த்து மிஸ் என்று மகிழ்ச்சியுடன் பேசும் போது மிகவும் பெருமையாக உள்ளது.
நான் விலங்கு பறவைகளிடம் பற்றுற்றவள். அதன்மூலம் தெரு நாய்கள் குட்டிபோட்டால் நாயையும் நாய்குட்டிகளையும் பாராமரித்து குட்டிகளுக்கு 2 மாதம் ஆனதும் பிறருக்கு வளர்க்க கொடுப்பேன். அது போல் கிட்டதட்ட 150 நாய்குட்டிகளை வளர்க்க கொடுத்துள்ளேன். இப்போது அதற்கெல்லாம் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளேன். இப்போது பெரும் பிரச்சனை நாய்க்கடி. பொதுவாக நாய்கள் நம்மை கண்டால் பயப்படும். அதனிடம் அன்பாக இருந்தால் நமக்கு பாதுகாப்பாக இருக்கும். நாய் பெருக்கத்திற்கு முதல் காரணம் அவற்றிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யாதது. அப்படி செய்யப்படும் நாய்களையும் உடனே கொண்டு வந்துவிட்டு விடுகிறார்கள்.
குடும்பக்கட்டுப்பாடு செய்யும்போது அவை அதிக உணவு எடுக்கக்கூடாது. இஞ்சி பூண்டு கலந்த உணவு உண்ணக்கூடாது. அவற்றிற்கு அது தெரியாது. அதிக உணவு உண்ணும்போது தையல் பிரிந்துவிடும். இஞ்சி பூண்டு சாப்பிட்டால் அந்த மருந்தின் காரணமாக வாந்தி வரும். அப்படி பட்ட சூழ்நிலையிலும் தையல் பிரிந்துவிடும். திரும்பவும் குட்டிபோட ஆரம்பிக்கும். வருடத்திற்கு 2 முறை குட்டி போடும். ஒரு முறை 8 குட்டிகள் வரை போடும். ஒருவருடத்தில் அந்த குட்டியும் குட்டி போட ஆரம்பிக்கும். இப்போது தெரிந்துகொள்ளுங்கள் நாய்கள் பெருகுவதை.
இதை கட்டுக்குள் வர கருத்தடைசெய்யும் நிறுவனங்கள் கூட 2 நாள் வைத்து தையல் கூடியதும் கொண்டு வந்துவிட்டால் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தாலாம். ஒரிரு நாய்கள் இருந்தால் விரட்டாது கடிக்காது அதிக நாய்கள் இருந்தால்தான் விரட்டும் கடிக்கும். இந்த விழிப்புணர்வு மக்களுக்கும் தன்னார்வ தொண்டுநிறுவனங்களுக்கும் இருக்க வேண்டும். மற்ற உயிரினங்களையும் பாதுகாப்போம் .. அன்பாய் இருப்போம்.
(கும்பகோணத்தைச் சேர்ந்தவர் தி.ந.அகோர கௌரி சித்ரா. ஆசிரியையான இவர், தற்போது ஓய்வு பெற்ற நிலையிலும் கூட ஓய்வே இல்லாமல் பல பணிகளைத் தொய்வறச் செய்து வருகிறார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்)