எடப்பாடியிடம் போன அதிமுக.. "கட்சி இன்னும் பலவீனமாகும்".. தினகரன்!

Su.tha Arivalagan
Feb 23, 2023,12:04 PM IST

சென்னை:  முதல் ரவுண்டில் ஓ.பி.எஸ். ஜெயித்தார். 2, 3வது ரவுண்டில் இபிஎஸ் ஜெயித்துள்ளார். இன்னும் நிறைய ரவுண்டு இருக்கு. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மேலும் பலவீனமடையும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


அதிமுக பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த  ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும். அதில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று சுப்ரம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி வசம் வந்துள்ளது.


ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முடிந்து விட்டது .. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!


இதுகுறித்து டிடிவி தினகரன் தெரிவித்துள்ள கருத்து:


இது ஒரு சட்டப் போராட்டம். இப்போது எடப்பாடி வென்றுள்ளார். அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நன் பலமுறை சொல்லியுள்ளேன். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி எடப்பாடியிடம் இரட்டை இலை கொடுக்கப்பட்டால் இன்னும் பலவீனம் அடையும். அதுதான் உண்மை. அவர் ஆட்சி அதிகாரம் இருந்ததால் கிடைத்த பண பலம், மமதை இதனால் தன்னை தலைவராக அறிவிச்சிட்டிருக்கார். அதற்கு பொதுக்குழுவை வசப்படுத்தி செய்துள்ளார். இதையெல்லாம் மீறி காலம் அவர்களுக்கு தீர்ப்பு சொல்லும்.


நான் எடப்பாடியடம் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. தனிக்கட்சி தொடங்கியிருக்கோம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோதே பல முக்கிய நிர்வாகிகள் எங்களுடன் வந்து இணைந்துள்ளனர். அவர்களிடம் இருப்பது உண்மையான அதிமுக அல்ல. பண பலத்தால் அவர்களது கட்சி நடக்கிறது. வருங்காலத்தில் அம்மாவின் கொள்கைகளை கொண்டு செல்ல தொடங்கப்பட்ட எங்களது கட்சி தொடர்ந்து செயல்படும். இந்த தீர்ப்புக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


ஓபி.எஸ். என்னுடைய பழைய நண்பர். 3 முறை முதல்வராக இருந்தவர். இன்னொரு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக போராடிட்டிருக்கார். தேர்தல் ஆணையத்தில் அவர் முறையிடலாம். தீர்மானம் செல்லாது என்ற அப்பீல் இன்னும் உள்ளது. அவரை எங்களிடம் வாங்க என்று இப்போது நான் கூற மாட்டேன். அவர் என்ன செய்கிறார் என்பதை பார்ப்போம். இது அவருக்கு தற்காலிக பின்னடைவுதான். தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யலாம்..சிவில் வழக்கை இந்தத் தீர்ப்பு பாதிக்காது என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லியுள்ளது. இது தொடர் போராட்டம். முதல் ரவுண்டில் ஓபிஎஸ் ஜெயித்தார். 2வது, 3வது ரவுண்டில் அவர் ஜெயித்துள்ளார். இன்னும் நாலஞ்சு ரவுண்டு இருக்கு பார்ப்போம். 


சசிகலா நிலைப்பாடு குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அதை அவரிடம்தான் கேட்க முடியும் என்றார் தினகரன்.