வின்டோஸ் அப்டேட் குழப்பத்தால்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து.. சேவைகளில் தாமதம்

Su.tha Arivalagan
Dec 03, 2025,04:00 PM IST

டெல்லி: புதன் கிழமை காலை, நாட்டில் உள்ள பல விமான நிலையங்களில் செக்-இன் அமைப்புகள் செயலிழந்தன. இதனால் சில விமான சேவைகள் தாமதமாகின. பல விமானங்கள் ரத்தாகியுள்ளன. 


மைக்ரோசாப்ட் விண்டோஸ் அமைப்பில் ஏற்பட்ட உலகளாவிய சேவை இடையூறுகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாரணாசி விமான நிலையத்தில் பயணிகளுக்கு அறிவிப்பு பலகைகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.


நான்கு விமான நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், அகசா ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்தக் குழப்பத்தால் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களோ உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. நிலைமையைச் சமாளிக்கும் வேலைகளில், விமான நிறுவனங்கள் இறங்கியுள்ளன.




ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தாமதமான வருகை காரணமாக நான்கு விமானங்கள் தாமதமாகின. மேலும், இண்டிகோ விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ நிறுவனம் மொத்தம் 42 விமானங்களை இன்று ரத்து செய்தது. இதில் 22 வருகை விமானங்களும், 20 புறப்பாடு விமானங்களும் அடங்கும். டெல்லி சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான் காணப்பட்டது.