சரத் பவார் - அஜீத் பவார்.. குரு சிஷ்யராக.. தந்தை மகனாக.. நெகிழ வைத்த உறவு!
மும்பை: சரத் பவாருக்கும், அஜீத் பவாருக்குமான உறவு மகாராஷ்டிர அரசியலில் நீண்ட காலமாக வியந்து பார்க்கப்பட்ட ஒன்று. மகாராஷ்டிராவையும் தாண்டி தேசிய அளவில் கவனம் ஈர்த்த உறவும் கூட இது.
மகாராஷ்டிர அரசியலில் மிக நீண்ட காலம் விவாதிக்கப்படும் ஒரு உறவு சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையேயான உறவு என்று கூட சொல்லலாம். ஒரு தந்தை-மகன் பிணைப்பில் தொடங்கி, அரசியல் ரீதியான மோதல் மற்றும் பிளவு வரை நீண்ட இவர்களின் உறவைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனாவார். அஜித் பவாரின் தந்தை அனந்த்ராவ் பவார், அரசியல் பக்கமே வரவில்லை. மாறாக திரைத்துறையில் பணியாற்றி வந்தார். ஆனால் அஜீத் பவாரின் திறமையைக் கண்ட சரத் பவார், அண்ணன் மகன் இருக்க வேண்டிய துறை அரசியல் என்று முடிவெடுத்து அவரை அரசியல் பக்கம் இழுத்துக் கொண்டார். முழுமையாக அவரை ஒரு அரசியல்வாதியாக வார்த்தெடுக்க ஆரம்பித்தார். நல்ல அடித்தளமும் அமைத்துக் கொடுத்தார்.
பாராமதி தொகுதியில், 1991-ல் அஜித் பவார் தனது முதல் தேர்தல் வெற்றியைப் பெற்றார். அந்தத் தொகுதியில் அதுவரை சரத் பவார்தான் வென்று வந்தார். தனது அண்ணன் மகனுக்காக தனது தொகுதியை விட்டுக் கொடுத்தவர் சரத் பவார். பின்னர் பவாருக்காக, அஜீத் அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்தார்.
பல தசாப்தங்களாக, சரத் பவார் தேசிய அரசியலில் கவனம் செலுத்தியபோது, மகாராஷ்டிர மாநில அரசியலையும் கட்சி நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்ளும் நிழல் அதிகாரமாக அஜித் பவாரே இருந்து வந்தார். சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே வளர்ந்து அரசியல் களத்தில் தன்னை நிலை நாட்டத் தொடங்கிய போதிலும் கூட அஜீத் பவாரின் முக்கியத்துவத்தை சரத் பவார் கொஞ்சம் கூட குறைக்கவில்லை.
இந்த நிலையில்தான், பல ஆண்டுகளாக பிடிப்புடன், இறுக்கமாக இருந்து வந்த உறவில் முறிவு ஏற்படத் தொடங்கியது. அஜித் பவாருக்கும் சரத் பவாருக்கும் இடையே 2009-க்குப் பிறகு மெல்ல மெல்ல கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின.
சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே அரசியலுக்கு வந்த பிறகு, கட்சியின் தேசியப் பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டது. இது அஜித் பவாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நான் மாநில அரசியலிலேயே இருக்க வேண்டுமா என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாநில அரசியலில் தனக்கு முழு சுதந்திரம் வேண்டும் என அஜித் பவார் விரும்பினார். ஆனால், முக்கிய முடிவுகளில் சரத் பவாரின் தலையீடு இருந்ததை அவர் விரும்பவில்லை. இவர்களின் உறவில் மிகப்பெரிய திருப்பம் இரண்டு முறை ஏற்பட்டது:
ஒரு நாள் யாரும் எதிர்பாராத வகையில் புரட்சியை ஏற்படுத்தினார் அஜீத் பவார். பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் இணைந்து அஜித் பவார் திடீரென துணை முதல்வராகப் பதவியேற்றார். இது சரத் பவாருக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் சித்தப்பாவிடமே அஜித் பவார் திரும்பினார்.
2023-ல், அஜித் பவார் மீண்டும் அதிரடியாகச் செயல்பட்டு, பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க - சிவசேனா (ஷிண்டே) கூட்டணியில் இணைந்தார். இம்முறை அவர் கட்சியை உடைத்து, தேர்தல் ஆணையத்திடம் இருந்து கட்சிப் பெயரையும் சின்னத்தையும் (கடிகாரம்) பெற்றார். இது சரத் பவாரை நிறையவே உடைந்து போக வைத்து விட்டது. இப்படியாக தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவிடமிருந்து மெல்ல மெல்ல பிரிந்து போனார் அஜீத் பவார்.
ஆனாலும் அரசியல் ரீதியாக இருவரும் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும், குடும்ப விழாக்களில் இருவரும் இன்றும் சந்தித்துக் கொண்டனர். சமீப காலமாக இருவரும் மீண்டும் இயல்பாகப் பேசத் தொடங்கியதாகவும் கூறப்பட்டது. மீண்டும் சரத் பவாருடன் அஜீத் பவார் இணையப் போவதாக கூட செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில்தான் இப்படி ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் நடந்துள்ளது.