விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய அஜித்... இது தேவையா? - சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்

Meenakshi
Jan 16, 2026,05:26 PM IST

சென்னை: விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் அஜித்குமாரால் சமூக வலைதளங்களில் ரசிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு வணிக ரீதியான விளம்பரங்களிலும் நடிக்காமல் இருந்த நடிகர் அஜித் குமார், தற்போது மீண்டும் விளம்பர உலகிற்குத் திரும்பியுள்ளது கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


"நான் அந்தப் பொருளைப் பயன்படுத்தாமல் அதற்கு விளம்பரம் செய்ய மாட்டேன்" என்று கூறி, கடந்த காலங்களில் கோடி ரூபாய் சம்பளத்தை அஜித் உதறித்தள்ளியதாகச் செய்திகள் வந்தன. மற்ற நடிகர்களைப் போல விளம்பரங்களில் நடிக்காததுதான் அஜித்தை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டியது. தற்போது அந்தத் தனித்துவம் மறைந்து வருவதாக அவரது தீவிர ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.




இப்போது திடீரென விளம்பரத்தில் நடிப்பது அவரது பழைய கொள்கைக்கு மாறாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் (Campa Cola) மற்றும் நிதி நிறுவன விளம்பரங்களில் (Muthoot FinCorp) அவர் தோன்றுவது, பொதுமக்களுக்கு தவறான முன்மாதிரியாக அமையக்கூடும் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


அதே வேளையில், "இது ஒரு தொழில்முறை ஒப்பந்தம் மட்டுமே. விளையாட்டு வீரரான அஜித்திற்கு பந்தயங்களுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. அதற்காக அவர் விளம்பரங்களில் நடிப்பதில் தவறில்லை" என்று மற்றொரு தரப்பு ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். தனது பட புரமோஷனுக்கே வராதவர், காசுக்காக விளம்பரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதா?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது.