அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
- உமாராணி சங்கரலிங்கம்
அட்சய திருதியை அன்று, நாம் எதை வைத்துப் பூஜை செய்கிறோமோ, அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம், வெள்ளி வாங்குவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இன்றைய காலகட்டத்தின் உடனடித் தேவை: உலக அமைதி மற்றும் தண்ணீர்.
உலக அமைதிக்காக நாம் அனைவரும் இந்த அட்சய திருதியை அன்று இறைவனிடம் பிரார்த்திப்போம். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மக்களும் மனமகிழ்வுடனும், சந்தோஷத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி வேண்டுவோம்.
அடுத்து, தண்ணீருக்காக...
கடந்த முறை நாம் இதேபோல் செய்ததன் விளைவாக, மிகச் சிறப்பாக மழை பெய்து இன்றுவரை அதன் பயனை அனுபவித்து வருகிறோம். எனவே, வரும் அட்சய திருதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறையத் தண்ணீரைப் பூஜை அறையில் இறைவன் முன்பு வைத்து, நம் எல்லோருக்கும் குறைவில்லாத தண்ணீர் கிடைக்கவும், நல்ல மழை பொழிந்து ஆறு, குளம், குட்டை, ஏரி என அனைத்தும் நீர் நிரம்பி எங்கும் பசுமை நிலவவும், விவசாயம் செழிக்கவும், அமைதி மற்றும் ஆனந்தம் பெருகவும் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இது சரியான முறை என்று நீங்கள் கருதினால், உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இதைப் பகிருங்கள். இன, மத, ஜாதி, மொழி வேறுபாடின்றி அனைவரையும் அவரவர் வழிபடும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள்.
"நீரின்றி அமையாது உலகு"
பிரபஞ்சத்திற்கு நன்றி. பஞ்சபூதங்களுக்கு நன்றி. ஏக இறைவனுக்கு நன்றி.
(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)