Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?

Su.tha Arivalagan
Feb 28, 2026,05:30 PM IST

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரான் நாட்டிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி குறிவைக்கப்படலாம் என்ற அச்சம் உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் அலி லாரிஜானி என்ற பெயர் வேகமாக அடிபடத் தொடங்கியுள்ளது. யார் இந்த அலி லாரிஜானி.. இவருக்கும் அமரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கும் என்ன தொடர்பு.. வாங்க பார்க்கலாம்.


மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நகர்வுகள் ஈரானை பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன. 86 வயதான அலி கமேனி, ஈரானின் மிக உயரிய அதிகார மையமாக விளங்குகிறார். ஒருவேளை போர்ச் சூழலில் அவர் கொல்லப்பட்டாலோ அல்லது செயல்பட முடியாத நிலை ஏற்பட்டாலோ, நாட்டின் அதிகாரம் யாரிடம் செல்லும்? ஆட்சி கவிழ்ந்துவிடுமா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.




ஆனால் அலி கமேனி இதற்கு ஏற்கனவே ஒரு திட்டத்தை தயார் செய்து வைத்து விட்டார். தனக்குப் பின்னால் என்ன நடக்க வேண்டும் என்பதையும் அவர் திட்டமிட்டுக் கொடுத்து விட்டார். அவரது திட்டத்தை செயல்படுத்தப் போகும் நபர்தான் இந்த அலி லாரிஜானி.


அலி லாரிஜானி ஈரானின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தும், அதேபோல அமரிக்கா குறி வைக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்தும், கமேனி சமீபகாலமாகப் பொதுவெளியில் தோன்றுவதைத் தவிர்த்து வருகிறார். இதனால், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் லாரிஜானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அணுசக்தி பேச்சுவார்த்தைகள் முதல் ரஷ்யாவுடனான உறவு வரை அனைத்தையும் இவரே தற்போது முன்னின்று நடத்துகிறார்.


கமேனியின் உத்தரவின்படி, ஈரானின் ஒவ்வொரு முக்கியப் பதவிக்கும் தலா நான்கு வாரிசுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு தாக்குதலில் ஒரு தலைவர் கொல்லப்பட்டால், அடுத்த விநாடியே மற்றொருவர் அந்த பதவிக்குத் தானாக வந்து விடுவார்கள். அந்த வகையில், இந்த நான்கு அடுக்கு பாதுகாப்பு முறை திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் செயல்பாடுகளில் தேக்க நிலை வராது என்பது கமேனியின் திட்டமாகும்.


கமேனியைப் போல, லாரிஜானி ஒரு மதகுரு அல்ல, ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரி மற்றும் ராணுவப் பின்னணி கொண்டவர். கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், போர்ச் சூழலில் நாட்டை வழிநடத்தும் நிர்வாகத் தலைவராக இவர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்க வேண்டும் என்பதில் அமெரிக்காவும், ஈரானின் பிராந்திய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் இஸ்ரேலும் உறுதியாக உள்ளன. இருவருக்கும் உள்ள பொது நோக்கம்.. ஈரானைக் காலி செய்வது. ஈரானின் ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கிய விஞ்ஞானிகள் கடந்த காலங்களில் இஸ்ரேலால் குறிவைத்துக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது கமேனி மீதான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.


அலி கமேனி மறைந்தால், ஈரான் பெரும் உள்நாட்டு குழப்பத்தில் ஆழ்ந்துவிடும் எனப் பலர் கருதுகின்றனர். ஆனால், லாரிஜானி போன்ற அனுபவம் மிக்கவர்களை முன்னிறுத்துவதன் மூலம், ஆட்சி அதிகாரம் சீராகத் தொடர்வதை உறுதி செய்ய ஈரான் முயல்கிறது. ஆனால் இதையும் தகர்க்க வேண்டும் என்பதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நோக்கமாகும். ஈரானில் தங்களுக்கு சாதகமான அரசு அமைய வேண்டும் என்று இந்த இரு நாடுகளும் விரும்புகின்றன. அந்த நோக்கில்தான் இன்றைய தாக்குதலை அமெரிக்கா தொடங்கியுள்ளது. ஆட்சி மாற்றமே தாக்குதலின் நோக்கம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகவே கூறியுள்ளார்.


தற்போது  அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் பெரும் தாக்குதலால் வெகுண்டுள்ளது ஈரான். இது முழு அளவிலான போராக மாறினால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும், உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. லாரிஜானி ஒரு தற்காலிகப் பாலமாக இருந்து நாட்டைப் பாதுகாப்பாரா அல்லது புதியதொரு புரட்சிக்கு வித்திடுவாரா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.