KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?
புவனேஸ்வர் : ஒடிசா மாநில கல்வித்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், அம்மாநில அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கை முடிவை அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மழலையர் பள்ளி (Kindergarten) முதல் முதுகலை (Postgraduate) வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இனி இலவசக் கல்வி வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் பா.ஜ.க அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு பெரும் பேசு பொருளாகியுள்ளது. கண்டதுக்கெல்லாம் இலவசங்களை பல கட்சிகள் அறிவித்து வரும் நிலையில் இந்த இலவசக் கல்வி என்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டம் குறித்துப் பேசிய ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி கூறுகையில், "கல்வித்துறையில் இது ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகும். கல்வியை அனைவருக்கும் எளிய முறையில் கொண்டு சேர்ப்பதும், ஏழை மாணவர்களின் உயர்கல்விக்குத் தடையாக இருக்கும் நிதிச் சுமைகளை அகற்றுவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கல்வி என்பது ஒரு சிலருக்கான சலுகை அல்ல; அது அனைவருக்குமான உரிமை என்பதை எங்கள் அரசு உறுதி செய்துள்ளது" என்றார்.
இந்த இலவசக் கல்வித் திட்டம், குறிப்பாகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமையும். இதன் மூலம் கட்டணச் சுமையின்றி மாணவிகள் தங்களது படிப்பைத் தடையின்றித் தொடர முடியும். இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவில் எல்.கே.ஜி முதல் முதுகலை வரை (KG to PG) இலவசக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தும் முதல் மாநிலங்களில் ஒன்றாக ஒடிசா உருவெடுத்துள்ளது.
தங்கள் அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வித்துறையில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ (NEP 2020) அமல்படுத்தியதோடு, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 'கோதாவரிஷ் மிஸ்ரா ஆதர்ச தொடக்கப் பள்ளிகளை' (Godavarish Mishra Adarsh Primary Schools) ஒடிசா அரசு நிறுவி வருகிறது. இதன் முதல் கட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ள 2,200 பள்ளிகளில், 322 பள்ளிகளுக்கு ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க, கடந்த இரண்டு ஆண்டுகளில் 26,615 கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 45,000 ஆசிரியர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. உயர்கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில், ஒடிசாவின் கிராமப்புறப் பகுதிகளில் 18 புதிய அரசுப் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தில் புதிதாக 4 பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும் என்றும் முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.
கிழக்கு இந்தியாவின் முதன்மையான கல்வி மையமாக ஒடிசாவை மாற்றுவதே தங்களின் தொலைநோக்கு பார்வை என்றும், இந்த இலவசக் கல்வித் திட்டமும், கட்டமைப்பு மேம்பாடுகளும் ஒடிசாவின் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சிறந்ததொரு கல்விச் சூழலை உருவாக்கும் என்றும் ஒடிசா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்த இலவசக் கல்வித் திட்டத்தை பின்பற்றலாம்.